மற்றுமொரு சீசன். மற்றுமொரு ஏமாற்றம். பேப்பரில் பார்க்கும் பொழுது பெரிய அணியாக தெரியும் RCB அணி களத்தில் இறங்கும் பொழுது தடுமாறுகிறது. சரியான கலவையில் அணியை தேர்வு செய்யாதது, மோசமான பந்துவீச்சு இவைதான் RCB அணியை இந்த ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்துக்குத் தள்ளியது.
ஷிம்ரான் ஹெட்மயர், ஷிவம் தூபே ஆகிய வீரர்களை இந்த முறை ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கியது RCB. ஆனால் இந்த சீசனில் இவர்களின் மோசமான செயல்பாடு RCB அணிக்கு பாதகமாக அமைந்தது.
ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத 3 வெளிநாட்டு வீரர்கள் இருந்திருந்தால் RCB அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கக்கூடும். அந்த 3 வீரர்களைப் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
1 ) ஜேசன் ஹோல்டர்.
RCB அணியில் இந்த முறை ‘மார்க்கஸ் ஸ்டோய்னஸ்’ மற்றும் ‘கோலின் டீ கிராண்ட்ஹோம்’ ஆகிய திறமை வாய்ந்த அதிரடியாக விளையாட கூடிய ஆல்-ரவுண்டர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் இந்த 2 பேரும் இந்த ஐபிஎல் சீசனில் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற் போல் விளையாடவில்லை. இது RCB அணிக்கு மிகுந்த பின்னடைவாக அமைந்தது.
தற்போதைய கிரிக்கெட் உலகில் அதிகம் அறியப்படாத ஒரு திறமைசாலியான ஆல்-ரவுண்டர் தான் ‘ஜேசன் ஹோல்டர்’. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகிறார் ஹோல்டர். ஆனால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவர் ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்படுகிறார்.
கடைசியாக 2016-ஆம் ஆண்டு ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்காக களமிறங்கி இருந்தார் இவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவரின் சிறப்பான ஃபார்மை வைத்து பார்க்கும்பொழுது RCB அணி இவரை இந்த முறை ஏலத்தில் எடுத்து இருந்தால் அது RCB அணிக்கு பெரிய பலமாக இருந்திருக்க கூடும் என்பதில் சந்தேகமில்லை.
2 ) கிறிஸ் ஜோர்டான்.
கடைசி கட்ட மோசமான பந்துவீச்சு தான் RCB அணிக்கு இந்த ஐபிஎல் சீசனில் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. உமேஷ் யாதவ், முஹம்மது சிராஜ் ஆகியோர் இறுதிகட்ட பந்துவீச்சில் ஏராளமான ரன்களை எதிரணிக்கு வாரி வழங்கினர். கேப்டன் கோலியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ‘டேல் ஸ்டெயின்’ காயம் காரணமாக விலகியது அவர்களுக்கு மேலும் பின்னடைவாகப் போனது.
இங்கிலாந்து அணியின் T-20 ஸ்பெஷலிஸ்ட்டாக திகழும் வேகப்பந்து வீச்சாளர் ‘கிறிஸ் ஜோர்டான்’ இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக பந்து வீச கூடிய திறமை படைத்தவர். இவரின் சிறப்பான வேகம் மற்றும் துல்லியமான யார்க்கர்கள் எதிரணிக்கு கடும் அச்சுறுத்தலை கொடுக்கக்கூடியது.
மேலும் இறுதிக் கட்டத்தில் பேட்டிங்கிலும் கை கொடுக்க கூடிய இவர் இந்த சீசனில் RCB அணிக்காக பங்கேற்றிருந்தால் அது அவர்களின் பந்துவீச்சில் நிச்சயம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.
3 ) அலெக்ஸ் ஹேல்ஸ்.
RCB அணிக்கு இந்த முறை தொடக்க ஆட்டத்தில் பெரிய ‘ஹிட்டர்கள்’ அமையவில்லை. விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் இந்த முறை பெங்களூர் அணிக்காக தொடக்க ஜோடியாக களமிறங்கினர். இதில் பார்த்தீவ் பட்டேல் இந்த சீசனில் தன்னால் முடிந்த அளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் பவர் பிளே ஓவர்கள் முடிந்த பிறகு இவரால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இந்த இடத்தில்தான் ‘அலெக்ஸ் ஹேல்ஸ்’ போன்ற அதிரடி வீரர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். இங்கிலாந்து அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் இவரை இந்த முறை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஹேல்ஸ் இந்த சீசனில் RCB அணிக்காக களம் இறங்கி இருந்தால் அது RCB அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய ஒரு பலமாக அமைந்து இருக்கும்.
பொதுவாகவே இங்கிலாந்து நாட்டு வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் பெரும்பாலும் எந்த அணியும் எடுப்பதில்லை. ஆனால் இந்த முறை ‘ஜானி பேர்ஸ்டோ’ மற்றும் ‘சாம் கரன்’ ஆகியோரின் திறமை வாய்ந்த ஆட்டங்கள் இனி வரும் ஐபிஎல் சீசனில் அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய் போன்ற அதிரடி வீரர்களுக்கு திறவுகோலாய் இருக்கும் என நம்பலாம்.