ஐபிஎல் ஏலம் என்றாலே, பெரிதும் எதிர்பார்த்த வீரர்கள் சொற்ப விலைக்கு விலை போவதும், யாரும் அறியப்படாத வீரர்கள் கோடிக்கணக்கில் விலை போவதும் வாடிக்கையான ஒன்று. கடந்த சில மாதங்களாக இன்று நடந்த ஏலத்திற்காக பல அணிகள் பின்னணியில் பல வியூகங்களை வகுத்து வந்துள்ளனர். ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் நிறைய வீரர்களை அணியிலிருந்து விடுவித்ததால், விடுபட்ட வீரர்களின் இடங்களை நிரப்பும் கட்டாயத்தில் இருந்தனர். சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் பெரும்பாலான வீரர்களை தக்கவைத்துக் கொண்டதன் காரணமாக சில வீரர்களை மட்டும் ஏலத்தில் எடுக்க முற்பட்டனர்.
ஜெய்ப்பூரில் நடந்த ஏலத்தில் பல சுவாரஸ்யம் நிறைந்த வர்த்தகங்கள் நடைபெற்றது. 70 இடங்களுக்கு 60 வீரர்களை மட்டுமே அணிகள் தேர்வு செய்துள்ளனர். உலக கோப்பை 2019 காரணத்தினால் பல நாடுகளிருந்து ஐபிஎல்-லில் பங்குபெறும் வீரர்களை அந்தந்த நாட்டின் கிரிக்கெட் வாரியமானது ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் அழைத்துக் கொள்ளும் என்பதாலும், நாடாளுமன்ற தேர்தல் காரணத்தினால் ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கக்கூடும் என்பதாலும், அந்தந்த சூழ்நிலைக்கேற்ப வீரர்களை அணிகள் தேர்வு செய்துகொண்டனர்.
அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இரு வீரர்கள் உள்ளனர்.
ஜெயதேவ் உனட்கட்
ஜெயதேவ் உனட்கட் கடந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் மிக அதிக விலைக்கு விலைபோன கிரிக்கெட் வீரர். சுமார் 11.50 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு அப்போதைய புனே அணியில் நன்றாக ஆடி இருந்ததால் இவரது விலை கிடுகிடுவென உயர்ந்தது.
சரி, நல்ல விலைக்கு போயிருக்கார்... நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராஜஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் சொல்லிக் கொள்ளும் வகையில் விளையாடவில்லை. கோடிகளை அள்ளிய உனட்கட் இப்படியா விளையாடுவது என்று இவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
எனவே ஏலத்திற்கு முன்பு வேண்டப்படாத வீரர்களை விடுவித்து கொள்ளும்படி பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில், ராஜஸ்தான் அணி இவரை விடுவித்தது. மோசமான ஆட்டத்தினால் அவர் கழற்றி விடப்பட்டார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறிவந்தனர். உனட்கட் ஏலம் விடப்பட்ட தொடக்கத்தில் பெங்களூரு அணியும் டில்லி அணியும் இவரை எடுக்க முற்பட்டனர், இடையில் சென்னை அணியும் இவரை எடுக்க முயன்றது, இவரை விடுவித்திருந்த ராஜஸ்தான் அணியும் பந்தயத்தில் குதித்தது. பின்பு இவரின் தொகை கிடுகிடுவென உயர சென்னை பின்வாங்கியது. ராஜஸ்தான் இவரை பெற்று விடும் என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் பஞ்சாப் அணி களத்தில் குதித்தது. மாறிமாறி தொகையை உயர்த்திக்கொண்டே சென்றனர். ஒரு கட்டத்தில் 8.40 கோடி என்று விலை உயர பஞ்சாப் அணி பின்வாங்கியது. ஆதலால் மீண்டும் ராஜஸ்தான் அணியை இவரைக் கரம்பிடித்தது.
அடிப்படை விலை : 1.50 கோடி
விற்கப்பட்ட விலை : 8.40 கோடி
வருண் சக்கரவர்த்தி
ஏலத்திற்கு முன்பு பெரிதும் பேசப்பட்ட தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். வருண் ஏலம் விடப்பட்ட தொடக்க முதலே டெல்லி மற்றும் சென்னை அணி இவரை எடுக்க ஆர்வம் காட்டினர். ஒரு பக்கம் விலை ஏறிக்கொண்டே போக பஞ்சாப் அணியும் களத்தில் குதித்தது. விலை 3 கோடியை தாண்ட சென்னை அணி பின்வாங்கியது. அதன்பின்பு டெல்லியும் அணியும் பின்வாங்கியது. ஏலத்தின் கடைசி கட்டத்தில் பஞ்சாப் அணிக்கு போட்டியாக ராஜஸ்தான் குதித்தது. பின்பு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் இவரை எடுக்க முற்பட்டது. சற்றும் தளராத ராஜஸ்தான் அணி வருணை எடுத்தே தீரவேண்டுமென்று கோடிகளை அடுக்கிக் கொண்டே சென்றது. இறுதியில் 8.40 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார் வருண்.
கடந்த ஆண்டு நான்காம் பிரிவு வீரராக இருந்த இவர். தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த வீரராக திகழ்ந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார் வருண். தற்போது முதன் முறையாக தமிழ்நாடு ரஞ்சி அணியில் களம் கண்டு ஆடி வருகிறார்.