உலகின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான தொடர்களின் ஒன்று IPL. 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரின் முதல் போட்டியே ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் இடையே நடந்த இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சரவெடியாய் வெடித்த இவர், எதிரணியின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்துவிட்டார்.
முதல் போட்டியே IPL-இன் மிகப்பெரிய வளர்ச்சிக்கு முதல் படியாக அமைந்தது. ஆனால் அந்த போட்டிக்கு பிறகு அவர் எந்த போட்டியிலும் பெரிதாக சாதிக்கவில்லை. அதே போல் ஒரே ஒரு ஆண்டு மட்டும் சிறப்பாக செயல்பட்டுவிட்டு அடுத்த வருடம் காணாமல் போனவர்களும் இதில் அடங்கும். அப்படி குறிப்பிட்டு பார்த்தால் இந்திய வீரர்களே இந்த வரிசையில் அதிகம். கீழ்கண்ட பதிவில் நாம் காணவிருப்பது, IPL தொடரில் அதிக சராசரி வைத்துள்ள முதல் ஐந்து வீரர்களை காணப்போகிறோம். குறைந்தபட்சம் 30 ஆட்டங்களும் இரண்டு தொடரில் பங்கேற்று உள்ளவர்களும் இதில் அடங்குவர்.
5. ஷான் மார்ஷ்
ஷான் மார்ஷ், IPL முதல் தொடருக்கு முன் இந்த பெயரை பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஆனால் அந்த ஆண்டு IPLன் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றி சென்றார். ஒரு தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கு வழங்கப்படும் விருது ஆரஞ்சு கேப். 2008ம் ஆண்டு நடைபெற்ற தொடரின் பாதியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் இடம் பெற்ற இவர், தனது திறமையால் அனைவரையும் கவர்ந்தார். குறிப்பாக பஞ்சாப் அணி அரை இறுதி சென்றதுக்கு முக்கிய காரணமாக இவர் கருதப்பட்டார். இடது கை பேட்ஸ்மேனான இவர் பந்தை பௌண்டரிக்கு அடிப்பதில் வல்லவராக இருந்தார்.
முதல் சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்த இவர், அதன் பிறகு பெரிதாக இதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினார். அடுத்தடுத்த சீசனில் மில்லர், மாஃஸ்வெல் போன்ற வீரர்களின் வருகையால் அணியில் இடம்பிடிக்க முடியாமல் போனது. இதுவரை IPL தொடர்களில் மொத்தம் 69 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள இவர், 2477 ரன்களை குவித்துள்ளார். சராசரியாக 39.95 ரன்களும், ஸ்ட்ரைக் ரைட்டாக 132.74 உம் வைத்துள்ளார். தனது அதிகபட்ச ஸ்கோராக 115 ரன்களை வைத்துள்ள இவர், 20 அரை சதங்களும் 1 சதமும் அடித்துள்ளார்.
4. மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி, "பேர கேட்ட உடனே சும்மா அதிருத்துள்ள" என்ற பஞ்ச் டயலாக்கேற்ப எதிரணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்பவர். "தல" என்று சென்னை ரசிகர்களால் பெரும்பாலும் அழைக்கப்பட்ட இவரை தற்போது இந்தியா முழுவதும் அதே பெயரை கொண்டு செல்லமாக அழைக்கின்றனர். சென்னை அணிக்கு அதிக ரன்கள் மற்றும் சிக்ஸர்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் இவருக்கே. தொடர்ந்து சென்னைக்கே விளையாடிய இவர், இரண்டு ஆண்டுகள் மற்றும் புனே அணிக்கு விளையாடினார். மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் சென்னைக்கு கேப்டனாக திரும்பி விளையாடிய இவர், கோப்பையை கைப்பற்றி அசத்தினார். மேலும் இவ்வாண்டில் 450 ரன்களுக்கு மேல் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதுவரை IPLல் 158 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 4015 ரன்கள் குவித்துள்ளார். தனது அதிகபட்ச ஸ்கோராக 79 ரன்களையும் சராசரியாக 40.15 ரன்களும் வைத்துள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் 20 அரைசதங்களையும் கடந்துள்ளார்.