இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றாவது போட்டி தற்போது நியூசிலாந்தின் மவுன்ட் மங்குய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்றாலும் ஹர்திக் பாண்டியவிற்கு முக்கியத்துவத்தையும் தாண்டி, தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் நடைபெற்ற ஒரு போட்டியாகும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். "அதாவது காஃபி வித் கரன்" என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் ஜாலியாக பேசி ஹர்திக் பாண்டியா தனக்கு தோன்றியதை எல்லாம் சர்ச்சை வரும் என்று யோசிக்காமல் விளையாட்டாக பேசிவிட்டார்.
இவ்வாறு பேசியவுடன் வழக்கம்போல ஒரு சிறிய விஷயத்தை பெரிதாக்கும் பல ஊடகங்களும் "ஓவர்ரியாக்" செய்யும் நெட்டின்சன்களும் சேர்ந்து விஷயத்தை ஊதி பெரிதாக்கி விட்டனர். பின்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஆடாமல் அவர் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டார்.
இந்தியாவிற்கு வந்த பின்னர் பிசிசிஐயின் சுப்ரீம் கோர்ட் நியமித்த நிர்வாகக்குழு, ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை விசாரணைக்கு அழைத்தது. விசாரணையில் அந்த பேச்சுக்கு பகிரங்கமாக பாண்டியாவும் ராகுல் மன்னிப்பு கோரினர். மன்னிப்பு கோரினாலும், அவர்கள் உடனடியாக இந்தியாவின் சார்பாக போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டனர் .
இதன் காரணமாக மன அழுத்தத்துக்கு உள்ளான ஹர்திக் பாண்டியா வீட்டிலேயே முடங்கினார். பாண்டியாவின் தந்தை தனது மகனின் நிலையை பற்றி ஊடகத்திற்கு எடுத்துரைத்தார். 'அவன் ஒரு விளையாட்டுப் பையன்', எனவும் 'தெரியாமல் பேசிவிட்டான்', எனவும் அவர் விளக்கமும் கொடுத்தார்.
மைதானத்தில் நாமும் ஹர்திக் பாண்டியா பார்த்துள்ளோம் எப்போதும் விளையாட்டாகத் தான் இருப்பார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இவ்வளவு மன அழுத்தத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்த பாண்டியாவிற்கு புத்துணர்ச்சி ஊட்டும் வகையில் , கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி வந்தது.
விசாரணையில் ஆஜராகி தங்களுக்கான விளக்கத்தை கொடுத்த பின்னர் , சுப்ரீம் கோர்ட் நியமித்த பிசிசிஐயின் நிர்வாக குழு, இருவரின் மீதான தடையை நீக்கியது. இதன் காரணமாக பாண்டியா இந்தியாவிற்கு மீண்டும் விளையாட தகுதி பெற்றார். உடனடியாக பிசிசிஐ அவரை நியூசிலாந்து அனுப்பி வைத்தது.
ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து வந்து இறங்கிய அடுத்த நாளிலேயே இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கியது. அவர் வந்து இறங்கியவுடன் சூழ்நிலைக்கு சரியாக செட் ஆகாததால் இரண்டாவது போட்டியில் அவரால் ஆட முடியவில்லை. அவருக்கு பதில் விஜ்ய் சங்கர் ஆடினார்.
அவர் நியூசிலாந்து வந்து இறங்கிய நான்காவது நாளில் அவர் இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் களம் இறக்கப்பட்டார். இந்த போட்டியில் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும், மன அழுத்தத்திலும் அற்புதமாக ஆடினார்.
அவர் வீசிய முதல் 5 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தினார்.மேலும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் அடித்த எங்கோ சென்ற பந்தை இழுத்து வைத்து ஸ்பைடர்மேன் போல் பிடித்து அவரை வெளியேற்றினார். இவ்வளவு மன அழுத்தத்திலும் அற்புதமாக ஆடி அவரை உலகம் பாராட்டி வருகிறது.