இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி ஒருநாள் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. பின் நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போடாடியில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தன. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 212 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் முன்ரோ 72 ரன்களும் செரிஃபட் 43 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இந்திய வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய விஜய் சங்கர் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 43 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஆட்டமிழக்க அடுத்து வத்த பண்ட் முதல் பந்து முதலே அதிரடியை காட்டி 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ரோகித் சர்மா 38 ரன்களிலும் தோணி 2 ரன்னிலும் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு நெருக்கடி அதிகமானது.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் இந்தியர்களுக்கு நம்பிக்கை அளித்தார். அதிரடியாக ஆடி இலக்கை வேகமாக துரத்தினார். மறுமுனையில் களமிறங்கிய குர்னால் பாண்டியா ஆரம்பத்தில் ரன் எடுக்க மிகவும் தடுமாறினார். பின்னர் அவரும் அதிரடியாக ஆட, கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரின முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் 2 ரன்கள் எடுத்தார். 5 பந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்த பந்தை சௌத்தி வைட் ஆக வீசினார். பந்தை ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயற்சித்த தினேஷ் கார்த்திக் பந்து வைட் ஆனதால் அடிக்கவில்லை ஆனால் நடுவர் அந்த பந்திற்கு வைட் கொடுக்கவில்லை.(ஐசிசி விதிமுறைப்படி அந்தப் பந்து வைடு அல்ல) இதனால் ஆத்திரமடைந்த அவர், அடுத்த பந்தினை நேராக அடிக்க அது பீல்டரை நோக்கி சென்றது. மறுமுனையிலிருந்து ஓடி வந்த குர்னால் பாண்டியாவை திருப்பி அனும்பி விட்டார் கார்திக். இதனால் கடைசி 3 பந்துகளில் 14 ரன்களை அடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவரால் அடுத்த பந்தை பவுண்டரி அடிக்க முடியவில்லை. ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. 2 பந்திற்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் குர்னால் பாண்டியா அந்த பந்தில் ஒரு ரன் அடிக்க, கடைசி பந்தில் 12 ரன்கள் தேவைப்பட சௌத்தி வைட் ஆக பந்து வீச, அதை தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்தார். முடிவில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இறுதியில் தினேஷ் கார்த்திக் 16 பந்துகளில் 33 ரன்கள் அடித்திருந்தார். இதில் 4 சிக்சர்களும் அடங்கும்.
இந்நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு காரணம் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் ஓடாமல் இருந்ததே என ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அவர் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்து குர்னால் பாண்டியாவிற்கு ஸ்ட்ரைக் கொடுத்திருந்தால், அவர் பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்திருப்பார் என பதிவிட்டிருந்தனர் ரசிகர்கள்.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், "நன்றாக ஆடிக் கொண்டிருந்த குர்னால் பாண்டியாவிற்கு கடைசி ஓவரில் வெறும் ஒரு பந்து மட்டுமே கிடைத்தது" எனப் பதிவிட்டிருந்தது.