லண்டனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று (மே 25) நடைபெற்று வரும் நியூசிலாந்திற்கு எதிரான முதல் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தனது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். பவுலர்களுக்கு மிகவும் சாதகமான இந்த மைதானத்தில் விராட் கோலி எடுத்துள்ள இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. பௌலிங்கிற்கு சாதகமான மைதானத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை சோதனை செய்வதற்காக கூட விராட் கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம். இந்திய அணி 13 வீரர்களுடன் களமிறங்கியது. காயம் காரணமாக விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை டிரென்ட் போல்ட் வீசிய பந்துவீச்சில் வெளிபடுத்த முடியவில்லை. அனுபவ வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் நேராக ஸ்டம்பிற்கு வீசிய பந்தை இந்திய துனைக்கேப்டன் பேட் கொண்டு தடுக்க முயன்றார். ஆனால் பந்து பேட்டில் படாமல் அவரது காலில் அடித்தது. இலங்கையைச் சேர்ந்த கள நடுவர் குமார் தர்மசேனா அவுட் வழங்கினார். இருப்பினும் ரோகித் சர்மா 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் 3வது அம்பையரும் கள நடுவரின் முடிவையே இறுதி முடிவாக தெரிவித்தார்.
ரோகித் சர்மாவைத் தொடர்ந்து இந்திய அனுபவ தொடக்க ஆட்டக்காரர் ஷீகார் தவான் தடுமாறி வந்தார். பின்னர் டிரென்ட் போல்ட்-ஆல் விக்கெட் வீழ்த்தப்பட்டார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுலுக்கு உலகக் கோப்பையில் ஆடும் XI-ல் தனது இடத்தை உறுதி செய்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக வழங்கப்பட்டது. ஆனால் வலதுகை பேட்ஸ்மேனான இவர் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளமால் டிரென்ட் போல்ட் வீசிய பந்தை பேட் கொண்டு தட்ட முயன்ற போது பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. இதனால் கே.எல்.ராகுல் மிகவும் கோபத்துடன் வெளியேறினார்.
இந்திய கேப்டன் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தபோது காலின் டி கிரான்ட் ஹாம் வீசிய மெதுவான பந்தை சரியாக எதிர்கொள்ளமால் போல்ட் ஆகி வெளியேறினார். ஹர்திக் பாண்டியா சில சிறப்பான ஷாட்களை இந்த இன்னிங்ஸில் விளையாடி வந்தார். அவர் கிரிஸில் இருக்கும் வரை இந்திய அணி குறிப்பிடதகுந்த ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இவருக்கு பக்கபலமாக எம்.எஸ். தோனி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இவர் 42 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களை எடுத்தார்.
இருவரும் சேர்ந்து 5வது விக்கெட்டிற்கு மொத்தமாக 38 ரன்களை சேர்த்தனர். இதில் ஹர்திக் பாண்டியா 37 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கும் ஆடும் XI-ல் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த பயிற்சி ஆட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாறுமாறாக வந்த பந்தை அடிக்க முயன்ற போது நேராக நின்று கொண்டிருந்த ஃபீல்டரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
ரவீந்திர ஜடேஜா தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அனுபவ ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா குறைவான பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்களை எடுத்தார். இடதுகை பேட்ஸ்மேன் ஜடேஜா 47 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார். டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நிஸாம் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி, பெர்குசன், கிரான்ட் ஹோம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.