இந்தியாவில் ஐபிஎல் தொடர் தொடங்கி பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஒவ்வொரு நாட்டினரும் தங்களது நாட்டில் இதுபோன்ற டி20 தொடரை துவங்கினர். ஆஸ்திரேலியா- வில் பிக் பேஸ், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான்-ல் பி.எஸ்.எல், வங்கதேசத்தில் பி.பி.எல், ஆப்கானிஸ்தானில் ஏ.பி.எல் என பல தொடர்களை துவங்கினர். இதில் ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு வகையான சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இன்று பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் ஒரே இன்னிங்ஸ்ல் சதமடித்து சாதனை படைத்தனர். இதுகுறித்து இந்த தொடரில் காணலாம்.
இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்டகாங் வைகிங்ஸ் அணியும், ரன்ங்பூர் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ரன்ங்பூர் ரைடர்ஸ் அணி கேப்டன் மஷரபே மொரட்டஷா பேட்டிங்-யை தேர்வு செய்தார். இதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களான கிரிஸ் கெயில் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் களமிறங்கினர். கெயில் 2 ரன்னில் இருந்த போது அபூ ஜெயட் வீசிய பந்தில் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ரோசோவ் இருவரும் சிட்டகாங் அணியினர் வீசிய பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தனர்.
அதிரடியாக ஆடி வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் சதம் விளாசினார். அவர் சதமடித்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டையும் ராஸா-விடம் இழந்தார். பின்னர் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் ஒரு ரன்னில் அவுட் ஆகி தனது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். பின் களமிறங்கிய மிதுன் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இப்படி ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் மறுமுனையில் ஆக்ரோஷமாக ஆடிய ரோசோவ் 51பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் பிபிஎல் தொடரில் முதல் முறையாக ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் ஒரே போட்டியில் சதமடித்தனர் என்ற புதிய சாதனையை படைத்தனர். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த விராத் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஒரே போட்டியில் சதமடித்தது நாம் அறிந்ததே. ஆனால் பி.பி.எல் போட்டியில் இதுவே முதல் முறை ஆகும்.
இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 239 ரன்கள் குவித்தது.
பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கியது சிட்டகாங் வைகிங்ஸ் அணி. துவக்க ஆட்டக்காரரான முகமது சஷாத் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ராஸா 3 ரன்னிலும், கேப்டன் ரஹீம் 23 ரன்னிலும் வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து ஆடிய யாசிர் அலி அரைசதம் விளாசினார். பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். யாசிர் அலி-யும் 78 ரன்களில் இருந்த நிலையில் மொரட்டஷா வீசிய பந்தில் டிவில்லியர்ஸ்யிடம் கேட்ச் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவருக்கு 167 ரன்கள் மட்டுமே குவித்து 8 விக்கெட்டுகளை இழந்தது.
இதன் மூலம் ரன்ங்பூர் ரைடர்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி சதம் விளாசிய அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.