ஐ .பி.எல் ஏலம் என்றாலே பல சுவாரசியங்கள் நிகழ்வது சகஜம். புதுமுக வீரர்களின் படையெடுப்பு மிகவும் கவனிப்புக்கு உள்ளாக்கும். அதுபோலவே இம்முறையும் தவறாமல் நிகழ்ந்துள்ளது. அதில் கவனிக்கபட வேண்டியது சிவம் டுபே (RCB) மற்றும் வருண் சக்ரவர்த்தி(KXIP) ஆவர்.
சிவம் டுபே:
சிவம் டுபே, மும்பையை சேர்ந்த ஒரு மித வேக பந்துவீச்சை கொண்ட ஆல்-ரவுண்டர் ஆவார். இவர் தனது பலம்வாய்ந்த பராக்கிரமத்தை கொண்டு பல ஹிமாலய சிக்ஸர்கள் விளாசுவதில் திறமைசாலி. ஆம், இவர் உயரமும் மற்றும் நல்ல உடற்கட்டை கொண்ட தோற்றம் உடையவராவார். இதன் காரணமாகவே சிக்ஸர் விளாசுவதில் திறமை வாய்ந்தவர் என பல விமர்சகர்களால் பாராட்டப்படுபவர்.
இவர் பள்ளிகளுக்கு இடையேயான 14 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட்டிலும் பங்குகொண்டு விளையாடியுள்ளார். மேலும் சில காரணங்களுக்காக அடுத்த 5 வருடம் சரியாக கிரிக்கெட் விளையாட அவரால் முடியவில்லை. பின்பு, சில வருடங்கள் கழித்து 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்காக களம் இறங்கினார்.
இதுவே இவர் வாழ்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது எனலாம். பின்பு மும்பை அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக இப்பொழுது இவர் மாறியுள்ளார். இவர் பேட்ஸ்மேன் மட்டும் அல்லாது பந்துவீச்சிலும் தனது திறமையை வளர்த்துள்ளார். இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்டே மும்பை அணி விஜய் ஹசாரே 2018 கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.
ஆக, இதுமட்டும் இல்லாது மற்றோரு நிகழ்வும் உண்டு. இவர் சிக்ஸர் விளாசுவார் என்று சொன்னோம் அல்லவா அதை லைவ் ஆக மும்பை டி-20 லீக்-இன் போது செய்துகாட்டியுள்ளார். பிரவின் தாம்பே ஓவரில் வரிசையாக 5 சிக்ஸர்-களை விளாசி தெறிக்கவிட்டுள்ளார் இவர். இதனை தொடர்ந்து இவர் ஐ.பி.எல் ஏலத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என கணிக்கப்பட்டது அதுபோலவே இவரை 5 கோடி ரூபாய்க்கு RCB அணி ஏலம் எடுத்துள்ளது.
சிறிய ஆடுகளமான பெங்களூருவில் பல சிக்ஸர்கள் பறப்பது சர்வ சாதாரணம். இப்போது இவரும் இவர் பங்குக்கு பல சிக்ஸர்கள்அடிக்க காத்திருக்கிறார்.
வருண் சக்ரவர்த்தி:
வருண் சக்ரவர்த்தி என பேரை கேட்டாலே தெரியும் அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்று. ஆம், இவர் தமிழ் நாட்டை சேர்ந்த ஒரு மாயாஜால சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர் தனது 13 வயதிலேயே கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டார், அப்போது ஒரு விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேன் ஆக விளையாட ஆரமித்தார்.
பின்பு தனது கல்லூரி படிப்பை SRM யூனிவெர்சிடியில் தொடர்ந்தார். அதன்பின் சில கிளப்-களில் சேர்ந்து கிரிக்கெட் மீதான தனது திறமையை வளர்த்து கொண்டார். அங்கு தற்காலிகமாக வேகா பந்துவீச்சிலும் பயிற்சி பெற்றார். இவரது முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக கிரிக்கெட்டை விளையாட தவிர்த்தார்.
கிரிக்கெட்டின் மீது கொண்டமோகத்தால் அவ்வபோது சுழற்பந்துவீச்சை பயிற்சி கொண்டு தெருக்களில் நடக்கும் போட்டிகளில் அதை செயல்படுத்துவார். இப்படியாகத்தான் இவர் தனது சுழற் வித்தையை கற்றுக்கொண்டார் எனலாம்.
மேலும், 2018-ல் நடந்த TNPL தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். அதனை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் பல பேட்ஸ்மான்களுக்கு தொல்லைகொடுத்து அதிக விக்கெட் எடுத்தோர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார் வருண்.
இப்படி இவரின் சிறப்புகள் மேலோங்கி இருக்க பல அணியின் உரிமையாளர்களும் இவரை உற்றுநோக்கி இருந்தனர். காரணம் இவர் ஐ.பி.எல் போட்டிகளை CSK மற்றும் KKR வீரர்களுக்கு வலைப்பயிற்சியின் போது பந்து வீசியுள்ளார். இதனை கருத்தில் கொன்டே இவரை ஏலம் எடுக்க முற்பட்டனர். இதைப்பற்றி CSK வீரரான ஹர்பஜன் சிங்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இறுதியாக KXIP அணி இவரை 8.4 கோடிக்கு ஏலம் எடுத்து தனதாக்கி கொண்டது. இதற்க்கு காரணம் நம்ம ஊரை சேர்ந்த அஸ்வின்-இன் வேலையாக இருக்குமோ. அவருக்கு தெரியாதா நம்ம ஊரு ஸ்பின்னர் பத்தி.