இந்த 2 வித்தியாசமான முடிவால் மற்ற அணி கேப்டன்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் கேன் வில்லியம்சன் 

டாஸின் பொது வில்லியம்சன் மற்றும் விராட் கோஹ்லி
டாஸின் பொது வில்லியம்சன் மற்றும் விராட் கோஹ்லி

கேன் வில்லியம்சன், உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிக பிடித்தமான வீரர் என கூறலாம். தனது வித்தியாசமான பேட்டிங் திறமையால் உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவராய் இருக்கின்றார். மெக்கல்லம் ஓய்வு பெற்ற பிறகு நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் ரசிகர்கள் ராஸ் டைலர் மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவர் என ஆர்வமாக இருந்தனர். ஆனால் யாரும் எதிர் பார்க்காத விதமாக வில்லியம்சன் அறிவிக்கப்பட்டதால், அணிக்குள் சில சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் தாண்டி அணியை முன்னின்று வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாயில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதித்தார். அதே போல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இல்லாத போது சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை ஐ.பி.எல் இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். இதை தாண்டி இந்த இரண்டு வித்தியாசமான முடிவால் மற்ற அணி கேப்டன்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார் வில்லியம்சன்.

#2 நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி 2017:

நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி 2017
நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி 2017

நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே உலகக்கோப்பை 2015ல் நடைபெற்ற குரூப் ஆட்டத்தை யாராலும் அவ்வளவு எழிதில் மறக்க முடியாது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த பெரும் காரணமாக இருந்தவர் வில்லியம்சன். தனியாளாய் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு இவ்விரு அணிகளுக்கும் இடையே 2017ம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டி சுவாரசியம் குறையாமல் இருந்தது. முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 286 ரன்கள் எடுத்தது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஆரம்பம் முதலே விக்கெட்களை இழக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் 67 ரன்னுக்கு 6 விக்கெட் என்று பரிதாப நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.

ஒருபக்கம் விக்கெட்கள் விழ மறுமுனையில் அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்தார் மார்கஸ் ஸ்டைனஸ். ஆஸ்திரேலியாவின் பின் வரிசை பேட்ஸ்மேன்களுடன் சேர்ந்து இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தார். 7 ஓவர்களுக்கு 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு கொண்டு வந்து பின்பு 19 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்தால் போதும் என்ற சுலபமான கட்டத்தில் ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே ஆஸ்திரேலியா கைவசம் இருந்தது. களத்தில் ஸ்டைனஸும், ஹஸ்ட்லேவூடும் நின்றனர். 47வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்டைனஸ் எப்படியும் ஒரு ரன் எடுப்பார் என்று வில்லியம்சன் தன்னை ஷார்ட் மிட் ஆன் நிலையில் நிறுத்திக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்தது போலவே ஸ்டைனஸ் நேராக வில்லியம்சன் கையில் பந்தை அடித்து ஒரு ரன் எடுக்க முயற்சித்த போது ஹஸ்ட்லேவூட் எல்லை கோட்டின் வெளியே நின்றதால், உடனே சுதாரித்த வில்லியம்சன் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஹஸ்ட்லேவூட் ரன் அவுட் முறையில் அவுட்டானதால் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஸ்டைனஸ் 117 பந்துகளில் 146 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

#1 இந்தியா vs நியூஸிலாந்து 2016 T20 உலகக்கோப்பை

இந்தியா vs நியூஸிலாந்து 2016 T20 உலகக்கோப்பை
இந்தியா vs நியூஸிலாந்து 2016 T20 உலகக்கோப்பை

2016ம் ஆண்டு T20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. தனது முதல் போட்டியை நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது இந்தியா. ஆரம்ப போட்டி என்பது இரு அணிகளுக்குமே முக்கியமானதாகும். கேன் வில்லியம்சன் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக நியூஸிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களாக திகழும் டிம் சவுதி மற்றும் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளித்தார். இதற்கு பதிலாக இஷ் சோதி, சாண்ட்னெர் மற்றும் நாதன் மெக்கல்லம் ஆகியோரை அணியில் இணைத்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆதம் மில்னேவை வைத்து விளையாடினார். பெரும்பாலும் இந்திய அணி வீரர்கள் சூழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவார்கள்.

வில்லியம்சனின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி இந்தியர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 ரன்களுக்கு சுருண்டது. எளிதான இலக்கை இந்திய அணி சுலபமாக அடித்துவிடும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நாக்பூர் ஆடுகளம் பெரும்பாலும் சூழல் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட நியூஸிலாந்து சூழல் பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்களை பகிர்ந்து கொண்டனர்.

இறுதியில் 79 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்தியா. சாண்ட்னெர் 4 விக்கெட்டும், இஷ் சோதி 3 விக்கெட்டும் மற்றும் நாதன் மெக்கல்லம் 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்தியாவை சொந்தமண்ணிலேயே அதுவும் உலகக்கோப்பை போன்ற முக்கியமான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் வில்லியம்சனின் துடிப்பான இந்த முடிவு நியூஸிலாந்து அணிக்கு பெரும் முன்னேற்றத்தை கொடுத்தது.

தோனிக்கு பிறகு மிகவும் கூலான கேப்டன் என பெயரெடுத்தவர் கேன் வில்லியம்சன். இந்திய அணியின் நியூஸிலாந்து பயணம் மிகவும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வில்லியம்சன் புதிதாக என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.

Quick Links

Edited by Fambeat Tamil