T20 போட்டியை பொறுத்தவரை ஒரு வீரர் சதம் அடிப்பதே பெரிய சாதனை. ஆனால் பேட்டிங்கில் சதம் அடித்துவிட்டு பந்துவீச்சில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தால் இரட்டை சந்தோஷம் மற்றும் சாதனை தான். இவ்வாறு நடப்பது அரிதான விஷயம். ஆனால் அடுத்து வர இருக்கும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இரண்டு வீரர்கள் இச்சாதனயை எடுத்துள்ளனர். அதை பற்றிய ஒரு தொகுப்பை கீழே காணலாம்.
#1 ஆண்ட்ரே ரசல்
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கரிபியன் T20 தொடரில் ஜமைக்கா தள்ளவாஸ் அணிக்கான அணியில் விளையாடியதோடு கேப்டன் பொறுப்பையும் பெற்றார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு கிரிக்கெட் விளையாடிய ரசல், தான் விளையாடிய முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடைபெற்ற இவ்வாட்டத்தில் டாஸ் வென்ற ரசல் ட்ரின்பாகோ அணியை பேட்டிங் ஆட செய்தார். நல்ல பார்மில் இருந்த ட்ரின்பாகோ அணி நல்ல துவக்கம் அளித்தது. ரசல் உட்பட அனைத்து பந்து வீச்சாளர்களையும் துவம்சம் செய்தனர்.
இரண்டாம் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லின் மற்றும் மண்ரோ 98 ரன்கள் சேர்த்து ஒரு இமாலய இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 2 ஓவர் வீசிய ரசல் 27 ரன்கள் வழங்கி இருந்தார். மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் மீண்டும் ஒரு பௌண்டரி அடித்தார் மெக்கல்லம். 27 பந்தில் 56 எடுத்திருந்த அவரை இரண்டாவது பந்தில் அவுட்டாகினார் ரசல். அதை தொடர்ந்து மூன்றாம் பந்தில் ப்ராவோவையும் நான்காம் பந்தில் ராம்டின் விக்கெட்டையும் எடுத்து ஹாட் ட்ரிக் சாதனை படைத்தார்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டி சென்ற ஜமைக்கா அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்களை இழந்து தவித்தது. 6.1ஓவேரில் 41 ரன்னுக்கு 6 விக்கெட் என்ற பரிதாப நிலையில் இருந்த அணியை கரைசேர்க்க களமிறங்கினார் ரசல். தொடக்கம் முதலே அதிரடியாய் அடிய ஆண்ட்ரே ரசல் 40 பந்தில் சதம் அடித்து கரிபியன் T20 தொடரில் சாதனை படைத்தார்.
இதற்கு முன் 42 பந்துகளில் சதம் அடித்த இவரே தன் முந்தய சாதனையை உடைத்தார். இர்வின் லெவிஸுடன் 6 வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்த ரசல், ஆட்டமிழக்காமல் 49 பந்தில் 121 எடுத்து அணிக்கு வெற்றி தேடி தந்தார். ஆட்டநாயகன் விருதையும் தன்வசமாக்கினார்.
#2 ஜோ டென்லி
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டென்லி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக கொல்கத்தா அணியால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜான்சன் மற்றும் ஸ்டார்க் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஜூலை மாதம் 6ம் தேதி சர்ரே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரசல் செய்த அதே சாதனையை இவரும் படைத்தார்
கென்ட் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய டென்லி, 63 பந்துகளில் சதம் அடித்தார். 20 ஓவர் முடிவில் 173 என்ற சராசரி ஸ்கோரை கென்ட் அணி எட்டியது. இலக்கை விரட்டிய சர்ரே அணி வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே வேகமாக ரன்களை சேர்த்தனர். அந்த அணியின் பர்ன்ஸ் 21 பந்தில் 38 ரன்கள் அடித்து 12 ஓவர் முடிவில் 48 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான நிலையில் இருந்தனர்
தனது மூன்றாவது ஓவரை வீச வந்த டென்லி முதல் மூன்று பந்துகளில் 5 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 4, 5 மற்றும் 6 வது பந்தில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த அவர், இறுதியில் கென்ட் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற திருப்புமுனையாக இருந்தார். T20 வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரே வீரர் சதம் அடித்து பின்பு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, இச்சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமை படைத்த டென்லி ஆட்டநாயகன் விருதை வென்றார்.