ஒரு சிறந்த T20 அணியின் உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கூறலாம். அனைத்து சீசனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட அணிகளில் ஒன்று. இதற்கு முக்கிய காரணமாக பங்கு வகிக்கக்கூடியவர் அணியின் கேப்டன் தோனி. இதுவரை 3 ஐ.பி.எல் தொடரை வென்றுள்ளது. இரண்டு வருட தடைக்கு பிறகு 2018ல் மீண்டும் களமிறங்கிய சென்னை அணி, இறுதிப் போட்டியில் ஹைதெராபாத் அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
பேட்டிங் பௌலிங் என்று அனைத்து விதத்திலும் சிறந்து விளங்கும் ஒரு அணியாக உள்ளது. இதனாலேயே அடுத்த சீசனுக்கான ஏலத்தில் பெரிதாக யாரையும் வாங்கவில்லை. ஏற்கனவே சென்னை அணிக்காக 2013 மற்றும் 2014 சீசனில் விளையாடிய மோஹித் சர்மாவை ஏலத்தில் எடுத்தது. பிறகு இளம் வீரரான ருதுராஜ் கைகுவாட்டை குறைந்த தொகைக்கு வாங்கியது. 2019 ஆம் சீசன் மார்ச் மாதம் தொடங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும் வரவிருப்பதால் இத்தொடரின் முதல் பாதி துபாய் அல்லது தென் ஆப்பிரிக்காவில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கவுள்ள சென்னை அணிக்கு வரும் சீசனிலும் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளது. அதை பற்றிய தொகுப்பை இப்போது காணலாம்.
#1 தென் ஆப்பிரிக்க மண்ணும் அதனை சார்ந்த வீரர்களும்
சென்னை அணிக்கும் தென் ஆப்பிரிக்க வீரர் டுப்ளஸி அவர்களுக்கும் எப்போதுமே ஒரு நல்ல தொடர்புண்டு. தொடர்ந்து பல போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தால் அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். இவரை போன்றே மற்ற தென் ஆப்ரிக்க வீரர்களான தாஹிர் மற்றும் லுங்கி நிகிடியும் சென்னை அணிக்காக கடந்த சீசனில் விளையாடியவர்கள். ஒரு வேலை 2019 ஆம் ஆண்டிற்கான தொடரின் முதல் பகுதி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றால் இம்மூன்று வீரர்களும் சென்னை அணிக்கு பக்க பலமாக இருக்கக்கூடும்.
2018ல் சென்னை அணிக்காக 6 போட்டிகளில் பங்கேற்ற டுப்ளஸி, 162 ரன்களும் சராசரியாக 32.40 ரன்களை வைத்துள்ளார். ஹைதெராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றில் 67 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். சென்ற சீசனின் இன்ப அதிர்ச்சியாக சென்னை அணிக்கு அமைந்தது நிகிடியின் வருகை. நல்ல உயரம் கொண்ட இவர், பந்தை நன்றாக பௌன்ஸ் செய்யும் வல்லமை பெற்றவர். கடந்த சீசனில் 7 போட்டிகளில் பங்கேற்ற நிகிடி, 11 விக்கெட்களை சாய்த்தார். சிறந்த பந்து வீச்சாக பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி வெறும் பத்து ரன்களே விட்டுக்கொடுத்தார்.
இம்ரான் தாஹிர் பொறுத்த வரை 2018 ஆண்டு சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் முந்தய தொடர்களில் இவரது சிறப்பான பந்து வீச்சால் எதிரணிக்கு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார். இதுவரை ஐ.பி.எல் தொடரில் 38 போட்டிகளில் பங்கேற்றுள்ள தாஹிர், 53 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆதலால் இம்மூன்று வீரர்களும் தென் ஆப்பிரிக்காவில் சாதிக்கக்கூடும்.
#2 சிறந்த பந்துவீச்சாளர்கள் குழு
சென்னை அணியை பொறுத்த வரை பௌலர்கள் அனைத்து சீசனிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். பேட்ஸ்மேன்கள் போதிய ரன்கள் சேர்க்காத பட்சத்திலும், பௌலர்கள் அவர்களின் எதிரணியின் விக்கெட்களை வீழ்த்தி வெற்றி தேடி தந்துள்ளனர். நிகிடி, டேவிட் வில்லி, பிராவோ, ஹர்பஜன் சிங், மோஹித் சர்மா, சாண்ட்னெர், தாஹிர் என்று வேகம் மற்றும் சுழல் கலந்து சமநிலையில் பௌலிங் குழு உள்ளது.
ஐ.பி.எல் வரலாற்றில் இதுவரை அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பிராவோ மற்றும் ஹர்பஜன் சிங் முதல் ஐந்து இடத்திற்குள் அடங்குகின்றனர். 136 விக்கெட்களுடன் பிராவோ நான்காம் இடத்திலும், 134 விக்கெட்களுடன் ஹர்பஜன் ஐந்தாம் இடத்திலும் தற்போது உள்ளனர். சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த பிராவோ, சென்ற வாரம் தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த மான்சி சூப்பர் லீக் T20 தொடரில் பார்ல் ராக்ஸ் அணிக்காக சிறப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையை வெளிக்காட்டினார்.
திறமை மற்றும் அனுபவம் கலந்துள்ள சென்னை அணியின் வெற்றி பயணம், போட்டிகள் எங்கு நடைபெற்றாலும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.