நவீன கால கிரிக்கெட் போட்டிகள் பல மாற்றங்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றன. 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் என தொடங்கி 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டிகளாக குறைக்கப்பட்ட மாற்றம் டி20, டி10, டி5 என பற்பல சீர்திருத்தங்கள் அவ்வப்போது கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை ஏற்படுத்தும் முனைப்பிலும் உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளை பிரபலமடையச் செய்யும் நோக்கத்திலும் இத்தகைய மாற்றங்கள் புகுத்தப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், பகல் நேரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டிகள் பகல்-இரவு ஆட்டங்கள் ஆகவும் தற்போது மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டிலும் பல மாற்றங்கள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனிலும், ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும் வெற்றி பெற்ற அணிகளுக்கு சாதகமாகவும் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு, மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.
#1.போனஸ் புள்ளிகள் அறிமுகப்படுத்த வேண்டும்:
உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டங்களில் பங்கேற்கும் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படுகின்றன. அதேபோல், மிகப்பெரிய தொடர்களில் எதிர் அணிகளுக்கு எதிராக 100 ரன்கள் அல்லது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணிகளுக்கு கூடுதலாக போனஸ் புள்ளிகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில், தோல்வியுற்ற அணியிடம் இருந்து ஒரு புள்ளி பிடிக்கப்படும். இதன் காரணமாக, புள்ளிப் பட்டியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும். வெற்றி பெற்ற அணிகள் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதற்கான வாய்ப்புகளும் இந்த போனஸ் புள்ளியால் அதிகரிக்கப்படும்.
#2.25 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்துகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு:
50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே பந்தை வீசும் நிலையால் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக ஆட்டங்களில் முடிவு பெறுகின்றன. இதனால், வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களை கைப்பற்ற சற்று திணறி வருகின்றனர். 2011-ம் ஆண்டுக்கு பிறகு இரு இன்னிங்சிலும் இரு வெவ்வேறு புதிய பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், கடந்த 8 ஆண்டுகளில் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் டாப் 10 ஸ்கோர்களில் 6 மிகப்பெரிய ஸ்கோர்கள் குவிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு இன்னிங்சில் முதல் பாதிக்கு பிறகு, பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையில் புதிய பந்துகள் அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு, அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் குவிக்கப்படும் ஸ்கோர்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படும். ஏனெனில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பந்தினை எதிர்த்து விளையாட சற்று கடினமான முறையில் இருப்பதால் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவால் அளிக்கப்படும். எனவே, ஃபீல்டிங் செய்யும் கேப்டன் 25 ஓவர்களுக்குப் பிறகு பழைய பந்தை கொண்டே ஆட்டத்தை நகர்த்தலாம் அல்லது புதிய பந்தை தேர்வு செய்யலாம்.
எனவே, இதுபோன்ற இரு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது ஐசிசியின் பொறுப்பாகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுபோன்ற திருத்தங்களை மேற்கொண்டால், ஒருநாள் கிரிக்கெட் காண ஒரு புதுவித உணர்வு ஏற்படும்.