இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியிடும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 622/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மூன்றாம் நாளில் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 99/1 எடுத்திருந்தது.
இந்திய அணி கேப்டன் விராட் சுழற் பந்துவீச்சாளர்களை இன்றைய நாள் தொடக்கமுதலே அறிமுகப்படுத்தினார். ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை மார்க்கஸ் ஹாரிஸ் தூக்கி அடிக்க முயற்சித்தார். அவர் அதனை சரியாக அடிக்காததால் மிட் ஆனில் நின்று கொண்டிருந்த ராகுலிடம் சென்றது. ராகுல் அதனை டைவ் செய்து பிடிக்க முயற்சித்தார். இந்திய அணி வீரர்கள் அதனை விக்கெட் என்று நினைத்து கொண்டாட ஆரம்பித்தனர். ஆனால் ராகுல் "அந்த பந்தை தான் சரியாக பிடிக்கவில்லை எனவே இது அவுட் இல்லை" என்று நடுவரிடம் கூறினார். இந்த விளையாட்டு நல்லுணர்வை பார்த்த போட்டி நடுவர் இயன் குல்ட் அவரிடம் தம்ஸ் அப் செய்து பாராட்டினார். ஓவர் இடைவேளையின் போது ராகுலுடன் பேசிய நடுவர் அவரிடம் "அவுட் ஸ்டேன்டிங் மேட், வெல்டன் " என தனது பாராட்டை தெரிவித்தார்.
பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வரும் இந்த தொடரில், இந்த மாதிரியான விளையாட்டு நல்லுணர்வு கிரிக்கெட் போட்டிக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். ராகுலின் இந்த செயலுக்கு சிட்னி ரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். பின்னர் ஆடிய மார்க்கஸ் ஹாரிஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹாரிஸ் ஜடேஜா விடம் அவுட் ஆனார். பின்னர் ஆஸ்திரேலியாவில் விக்கெட்டுகள் சரிய தொடங்கின. ஷான் மார்ஷ், டிம் பேயின் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
2-1 வகிக்கும் இந்திய அணி ஏறக்குறைய டெஸ்ட் தொடரை வெல்வது உறுதியாகிவிட்டது. புஜாராவின் சதங்கள், கோலியின் சதம் மற்றும் தலைமை, வேகப்பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் இந்தியா சிறந்து விளங்கியது. எனவே இந்த தொடர் வரலாற்றில் சிறப்புமிக்க தொடராக அமையும். மறுபுறம் ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
அவர்களின் வருகைக்கு பின்பு ஆஸ்திரேலிய அணி மீண்டும் எழுச்சி பெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவர்களின் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர். ஸ்மித் மற்றும் வார்னர் உலகக் கோப்பை போட்டியின் போது ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு வருட தடை காலத்தை முடித்து பணிக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் தொடர் முடிந்தவுடன், இந்த இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி மாதம் பன்னிரெண்டாம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி இந்த தொடரில் விளையாட ஆஸ்திரேலியா வருகிறார். ஆஸ்திரேலிய அணி தங்களது முன்னணி பந்துவீச்சாளர்களுக்கு உலக கோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வு அளித்துள்ளது. எனினும், டெஸ்ட் தொடரின் சரிவை சீர் செய்ய ஆஸ்திரேலிய அணி ஒரு முனைப்புடன் விளையாடும். எனவே இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்.