சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை-2019 இறுதிப் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் எளிதில் மறந்து விட முடியாது. ஒருநாள் போட்டி வரலாற்றின் ஆக சிறந்த ஒரு போட்டியை இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அன்று நடத்தி காட்டியது.
50 ஓவர்கள் முடிவில் இரு அணிகளின் ஸ்கோரும் சமநிலை (டை) ஆக, வெற்றியை நிர்ணயிக்க ஆடப்பட்ட சூப்பர் ஓவரும் 'டை' ஆக இறுதியில் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி தனது முதல் உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. கோப்பையை வென்றது 'இங்கிலாந்து' என்ற பொழுதிலும் ரசிகர்களின் மனதை வென்றது 'நியூசிலாந்து' அணியே.
இந்த உலகக் கோப்பை முழுவதுமே நடுவர்களின் சில முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் நடுவர் 'தர்மசேனா' வழங்கிய ஒரு தவறான தீர்ப்பு நியூசிலாந்து அணியின் உலக கோப்பை கனவையே தகர்த்தது.
பரபரப்பான இந்த இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் 'மார்ட்டின் கப்டில்' வீசிய ஒரு த்ரோ, ரன் எடுக்க ஓடிய இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சின் மட்டையில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது. பந்து பவுண்டரி சென்றதால் அந்த 4 ரன்கள் கணக்கெடுக்கப்பட்டு கூடுதலாக ஸ்டோக்ஸ் ஓடி எடுத்த 2 ரன்களும் சேர்த்து மொத்தம் 6 ரன்களை நடுவர் 'தர்மசேனா' இங்கிலாந்து அணிக்கு வழங்கினார்.
ஆனால் ரீப்ளேவில் பார்க்கும் பொழுது இரண்டாவது ரன் ஓடுகையில் பேட்ஸ்மென்கள் ஒருவரை ஒருவர் கிராஸ் செய்யவில்லை. எனவே விதிமுறைப்படி அந்த ரன் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. ஆனால் நடுவர் தர்மசேனா 5 ரன்களுக்கு, 6 ரன்களை அளித்ததால் போட்டி சமநிலை ஆகி நியூசிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பும் இறுதியில் பறிபோனது.
இந்த மோசமான தீர்ப்பு குறித்து போட்டி முடிந்த பிறகு பலரும் விமர்சித்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் இது முக்கிய பேசுபொருளாக ஆனது. இந்நிலையில் இதுபற்றி எந்த கருத்தும் கூறாமல் இருந்த நடுவர் தர்மசேனா தற்போது இதைப்பற்றி வாய் திறந்துள்ளார்.
ஒரு ஆங்கில நாளிதழுக்கு 'தர்மசேனா' அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,
"டிவியில் ரீப்ளே காட்சிகளை பொறுமையாக பார்த்து கருத்துகளை சொல்வது அனைவருக்குமே மிக எளிதான ஒரு காரியம்தான். இறுதிப்போட்டியில் கப்டில் வீசிய அந்த ஓவர் த்ரோக்கு நான் 6 ரன்கள் அளித்தது தவறு என்பதை நானும் ரீப்ளேவில் பார்க்கும்போது தெரிந்து கொண்டேன். ஆனால் மைதானத்தில் ரீப்ளே பார்த்து முடிவெடுக்கக் கூடிய வசதி எனக்கு இல்லை".
"நான் தவறு செய்துவிட்டேன். அதை நான் மறுக்கவில்லை ஆனால் அந்த தவறுக்காக நான் வருத்தப்பட மாட்டேன். இதுபோன்ற சிக்கலான தருணங்களில் மூன்றாவது நடுவரிடம் முறையிட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என எந்த ஐசிசி விதிமுறையிலும் இல்லை. அந்த சமயத்தில் போட்டியில் சக நடுவராக இருந்த 'மரைஸ் எராஸ்மஸ்' உடன் நான் வாக்கி டாக்கியில் பேசிவிட்டு தான் இந்த முடிவை அளித்தேன். ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னை பூர்த்தி செய்துவிட்டார் என்று எண்ணித்தான் நான் 6 ரன்களை அந்த ஓவர் த்ரோவிற்கு வழங்கினேன்".
இவ்வாறு நடுவர் தர்மசேனா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். எது எப்படி இருந்தாலும் மிகச் சிறந்த ஒரு ஒருநாள் போட்டியாக, ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இந்த போட்டி அமைந்தது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.