ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி உச்சத்தை எட்டியுள்ள நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் விராட் கோலி சர்ச்சைக்குரிய கேட்சில் அவுட் ஆனார். இதனிடையே கோலியே கள நடுவர் அவுட் கொடுத்திருந்தது இந்திய வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராஹ் கூறியுள்ளார்.
தனது முதல் இன்னிங்சில் இந்தியா, தனது தொடக்க விக்கெட்டுகளை வெகுவிரைவில் இழந்து தள்ளாடிக் கொண்டிருந்த நிலையில். புஜாரா மற்றும் கோலி இணை நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே போக, கேப்டன் கோலி நிதானமாக ஆடி சதத்தை எட்டினார்.
கோலி 123 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் டிரைவ் செய்ய முற்பட்டு பீட்டர் ஹன்ட்ஸ்கம்பிடம் கேட்ச் ஆனார். கேட்சை பிடித்தாரா இல்லையா என்று கோலி நடுவர்களை பார்க்க, நடுவர்கள் மூன்றாம் நடுவரின் உதவியை நாடினர். இம்மாதிரியான சமயத்தில் கள நடுவர்கள், தங்களின் முடிவை செய்கையில் காண்பிக்க வேண்டும். அதை “சாப்ட் சிக்னல்” என்பர். கள நடுவர்களின் முடிவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் அமையுமாயின், நடுவர்களின் முடிவு மாற்றப்படும். போதுமான ஆதாரங்கள் தெளிவாகவில்லை எனில் கள நடுவர்களின் முடிவே இறுதி முடிவாக கருதப்படும்.
கோலி அவுட்டான காணொளி
இப்போட்டியில் கள நடுவர்களில் ஒருவராக இருந்த குமார் தர்மசேனா, ஹன்ட்ஸ்கொம்பின் கேட்ச் உறுதியாக இருக்கிறது என்று அவுட் (சாப்ட் சிக்னல்) கொடுத்தார். இதை ஆராய்ந்த மூன்றாம் நடுவரான நைஜல் லாங் கேட்ச் உறுதியாக இருந்தது என்று அவரும் அவுட் என்று சொல்லவே இந்திய ரசிகர்களுக்கும், சக வீரர்களுக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஏனெனில் வீடியோ ரிப்ளேவில் பந்து கிரவுண்டை உரசி இருந்தது தெளிவாக தெரிந்தது, அதன் பின்தான் ஹன்ட்ஸ்கம் விரல்கள் பந்துக்கு அடியில் வந்திருந்ததும் தெளிவாக தெரிந்தது.
இதனிடையே போட்டிக்குப் பின் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பும்ராஹ் கூறியதாவது “கள நடுவர்களின் முடிவானது இந்திய வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது, முடிந்தது முடிந்ததுதான். அதை மாற்ற முடியாது, இப்போட்டியில் அடுத்து என்ன செய்வது என்று ஆராய்ந்து மும்முரமாக செயல்படுவோம்” என்று கூறினார்.
இந்திய அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்சை விளையாட ஆஸ்திரேலிய அணி களம் கண்டது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால், ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரரான ஆரோன் பின்ச், முகமத் ஷமி வீசிய பந்தில் கட்டை விரலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ரிடையர் ஹர்ட் ஆனார். அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மேலும், இப்போட்டியை வென்று 2-0 என்று தொடரில் முன்னிலை வகிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்த பும்ராஹ், கூறியதாவது “நாளை, முதல் செஷன் முக்கியமான ஒன்றாக இருக்கும், வெகுவிரைவில் விக்கெட்களை சாய்த்து ஆஸ்திரேலிய அணியின் இலக்கை கட்டுபடுத்த வேண்டும்” என்று கூறினார்
“என்னைப் பொறுத்தவரை, எங்களது அணியானது எந்த ஒரு இலக்கையும் எட்ட வல்லது, இருந்தாலும் நாளை சிறப்பான பந்து வீச்சினால் இலக்கை குறைக்க முற்படுவோம்.” என்று பும்ராஹ் தெரிவித்தார்.