இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் முதல் தர போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அது பற்றிய விவரங்களை இங்கே காண்போம்.
இலங்கையின் ‘மொரட்டுவா’ நகரில் தற்போது நடைபெற்றுவரும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியில், கொழும்பு கிரிக்கெட் கிளப் அணிக்காக களம் கண்ட இலங்கை இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ‘மலிண்டா புஷ்பகுமாரா’ 4வது இன்னிங்சில் சரசென்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு எதிராக 37 ரன்கள் விட்டுக்கொடுத்து அனைத்து 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இந்த போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கிளப் நிர்ணயித்த 349 ரன்கள் இலக்கை துரத்திய சரசென்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி புஷ்பகுமாராவின் அபார பந்துவீச்சில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 236 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியின் நான்காவது இன்னிங்சில் புதிய பந்தை கையில் எடுத்து பந்து வீச ஆரம்பித்த புஷ்பகுமாரா தொடர்ச்சியாக 18.4 ஓவர்கள் பந்து வீசி அனைத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனை படைத்ததுடன் கொழும்பு கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு உதவினார்.
மேலும் புஷ்பகுமாரா இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து 16 விக்கெட்டுகளை அவர் அறுவடை செய்தார். மேலும் முதல்தர சிறந்த பந்துவீச்சு பட்டியலில் இவரது சாதனை பந்துவீச்சு 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
மேலும் இவர் இந்த போட்டியில் மற்றுமொரு சாதனையும் படைத்தார். இந்த போட்டியில் அவர் எடுத்த முதல் விக்கெட் அவரின் முதல் தர கிரிக்கெட் போட்டியில் அவரது 700வது விக்கெட்டாக பதிவானது. இவர் ஒட்டுமொத்தமாக 123 முதல்தர போட்டிகளில் விளையாடி 715 விக்கெட்டுகளை, 19.19 என்ற சராசரியில் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 2017 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான இவர் இதுவரை இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டி மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடைசியாக 2010ஆம் ஆண்டு பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட்டில் முல்தான் அணிக்காக களம் இறங்கிய பாகிஸ்தான் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ‘ஜில்பிகுர் பாபர்’ இஸ்லாமாபாத் அணிக்காக 143 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை இச்சாதனையை இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே நிகழ்த்தியுள்ளனர்.1956ஆம் ஆண்டு இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ‘ஜிம் லேக்கர்’ ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 56 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
அடுத்ததாக இந்தியாவின் ‘அனில் கும்ப்ளே’ 1999 ஆம் ஆண்டு டெல்லி ‘பெர்ரோ ஷா கோட்லா’ மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 74 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
மேலும் மேலே குறிப்பிட்ட நான்கு பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது சுவாரசியமான உண்மையாகும்.