கிரிக்கெட் களம் என்பது வெறும் சச்சின்களாலும் வார்னேக்களாலும் மட்டுமே நினைவு கூரப்படுவதில்லை. பேசப்படாத அன்சங்க் ஹீரோஸ் (Unsung heros) கிரிக்கெட்டின் வரலாறு நெடுகிலும் உண்டு. ஒரு மேட்ச்சில் பிரகாசித்துக் காணாது போனோர். ஒரு சிரீஸில் நன்றாக வெளிப்பட்டு அடுத்த தொடரில் சரியாக ஆடாது அதற்கடுத்த தொடரில் அணியிலிருந்தே கழட்டி விடப்பட்டோர் ஏராளம். உதாரணத்திற்கு நரேந்திர ஹிர்வானி. பலம் வாய்ந்த எண்பதுகளின் மேற்குஇந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமான டெஸ்டிலேயே இரு இன்னிங்சிலும் தலா எட்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது அணிக்கு வெற்றியை பரிசளித்ததோர் மகத்தான லெக் ஸ்பின்னர். பின்னர் அவர்மீதான அதீத எதிர்பார்ப்பே அவருக்குச் சுமையாகி போனது. தொடர்ந்து வெற்றிகரமான பவுலராக இயங்க முடியாது தோற்று அணியிலிருந்தும் விலக்கப்பட்டார். நாம் இந்த தொடரில் ஹிர்வானி போன்றவர்களைப் பற்றிப் பேசப்போவதில்லை. இந்தியாவில் சச்சினை கொண்டாடும் அதே அளவில் நாம் சவுரவை, ட்ராவிட்டை லக்ஷ்மணை ஷேவாக்கை மதிக்கிறோம்.
அது மாதிரியான சாகச ஆட்டக்காரர்கள் மற்ற அணிகளிலும் உண்டு. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர்களின் நினைவை ஆராதித்து ஞாபகங்களைத் தூண்டி விடும் சிறிய முயற்சியே இது. இந்தத் தொடரில் முதலாவதாகக் கார்ல் ஹுப்பரை பற்றி சிலாகிக்கலாம் என்று எண்ணுகிறேன். என்னுடைய சிறு வயது கிரிக்கெட் எதிரிகளில்(இந்தியாவுக்கு எதிரின்னா நமக்கும் எதிரி தானே) முதன்மையானவராக என்னை பயமுறுத்திய ஹுப்பரை குறித்து எழுதி இந்த தொடரைத் துவக்குவது தானே முறையான ஒன்றாக இருக்க முடியும்.
ஹுப்பர். மேற்கிந்திய தீவுகளின் பலமாக அறியப்பட்ட வேகப்புயல்களின் மத்தியில் சுழல்பந்தை கொண்டும் விக்கெட்டுகளை ஈன்றெடுக்க முடியும் என நிருபித்த ஆஃப்ஸ்பின் பவுலர். விவியன் ரிச்சர்ட்ஸ் கூட ஒரு பார்ட் டைம் ஸ்பின்னர் தான். ஆனால் ஹுப்பர் தான் முதன் முதல் மேற்கிந்திய தீவுகளின் முழு நேர ஸ்பின்னர் கம் ஆல்ரவுண்டராக அறிப்பட்டவர்.
ஹுப்பரின் பவுலிங் கிட்டதட்ட நான்கே ஸ்டெப்களை மட்டும் கொண்டதாகவே இருக்கும்.மிகச் சாதாரணமாக நடந்து வந்து அவர் வீசிய பந்துகளில் சில முரளிதரனுடைய பந்துவீச்சின் சுழற்சிக்கு சற்றும் குறைந்ததல்ல என்பேன். அவ்வபோது வீசும் தூஸ்ராக்கள் ஷ்யூர் ஷாட்டாக விக்கெட்டுகளைப் பறித்தவை. மேற்கிந்திய தீவின் வேக அசுரர்கள் வெல்ல தவறிய ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சிலவற்றில் ஹுப்பரின் சுழல் நின்று பேசிய லரலாறு உண்டு. மிக மிகச் சிக்கனமான ஒரு பவுலரும் கூட. ஹுப்பர் பவுலிங்கின்போது மட்டுமல்ல பேட்டிங்கிலும் படு அலட்சியமாக எதிர்கொள்வதாகவே தெரியும்.ஆனால் அவர் தனது கால்களை நகர்த்தி ஆடிடும்போது வெளிப்படும் அழகில் பீல்டருக்கு கைதட்ட தோணுமே ஒழிய பந்தைப் பிடிக்கத் தோன்றாது. நமது அசாருதினின் பேட்டிங் ஸ்டைலை ஒத்தது ஹுப்பருடையது.
ரன்கள் தேவையெனில் சிக்சரும் பவுண்டரியுமாகப் பிளந்து கட்டுவார். இல்லையெனில் அருமையாக விக்கெட்டுகிடையில் ஓடிப் பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்திருப்பார். அணியின் தேவையறிந்து செயல்பட்ட வீரர்களில் ஒருவர். பிரைன் லாரா என்னும் புயலின் நிழலில் மங்கி போன ஹுப்பரின் பிம்பம் இந்தியாவுடன் ஆடுகிறார் என்றால் மட்டும் லாராவையும் தான்டி விஸ்வரூபம் எடுத்து நிற்கும். லாராவிற்கும் இந்தியாவிற்கும் ஆகாது. லாராவிற்கும் சுழற்பந்திற்கும் ஆகாது என்னும் லாராவின் பலவீன ஸ்தானங்களில் எல்லாம் தான் முன்னால் நின்று அணியைக் காத்த மிடில்ஆர்டர் வீரர் ஹுப்பர். இந்தியாவுடன் தான் தனது டெஸ்ட் இன்னிங்சின் அதிகப்படியான 253 ஐ குவித்திருந்தார். அதே போல் லாரா பம்மும் ஷான் வார்னேவை அவரது ஆஸ்திரேலிய ஆடுகளங்களிலியே தனது ஸ்பெஷல் ஸ்கொயர் ட்ரைவுகள் மூலமும் கால்களை நகர்த்தி அடித்து தூக்கிய மிட்விக்கெட் சிக்சர்களின் மூலமும் "என்ன சேதி" எனக் கேட்டிருக்கிறார்.
ஹுப்பர் ஒரு முறை ரிடையர்மென்டை அறிவித்து விட்டுப் பின்னர் அணித்தேவையை முன்னிட்டு காப்டனாக திரும்பி வந்து விளையாடினார்.2003 உலககோப்பையில் அவர் காப்டனாக செயல்பட்ட மேற்கிந்திய அணி ஒட்டு மொத்தமாக சரிவரச் செயல்படாது முதல் சுற்றிலேயே வெளியேற நேரிடவே தனது காப்டன் பதவியையும் விட்டுக் கொடுத்து தானும் அணியிலிருந்து தானே விலகி இளைஞர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து விட்டார். சோபர்ஸ், லாயிடு, ரிச்சர்ட்ஸ், லாரா, மார்ஷல், க்ரீனிட்ஜ், ஹெயின்ஸ், ரிச்சர்ட்சன் என மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட்டை ஆண்ட அரசர்களின் வரிசையில் கண்டிப்பாக கார்ல் ஹுப்பரின் பெயரும் இடம் பெறத்தக்கதே என்பதை மறுக்க யாராலும் இயலாது.
தொடரில் அடுத்ததாக டீன் ஜோன்ஸ் பற்றிப் பேசுவோம்.