கிரிக்கெட்டில் சில சமயம் விரும்பத்தகாத சில சாதனைகள் பதிவாவது உண்டு. அந்த சாதனையை படைத்தவருக்கே அதை கண்டு வருத்தம் ஏற்படும். அது போன்ற வேதனையான ஒரு சாதனை தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான ‘மகேந்திர சிங் தோனி’ வசம் சேர்ந்துள்ளது. அதனைப் பற்றிய சுவாரசிய தகவல்களை இங்கு காண்போம்.
பொதுவாக தோனி கிரிக்கெட்டில் மிகவும் ராசியான ஒரு வீரர். அதிலும் குறிப்பாக ‘ராசியான கேப்டன்’ என பெயர் எடுத்தவர். அவரது தலைமையில் தான் இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி-20 உலகக் கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையும் வென்று சாதித்தது. மேலும் உலக அளவில் இந்த மூன்று முக்கிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனி வசம்தான் உள்ளது.
ஆனால் டி-20 போட்டிகளில் தோனி எடுக்கும் ரன்கள் அந்த போட்டியில் இந்திய அணியின் தனி நபர் அதிகபட்ச ரன்களாக அமையும் பொழுது அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவது ஒரு வேதனையான உண்மையாகும்.
குறிப்பாக நிகழ்ச்சி நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணி டிம் செய்ஃபர்டின் அபார ஆட்டத்தால் 219 ரன்கள் குவித்தது. அந்த மெகா இலக்கை துரத்திய இந்திய அணியில் அனைத்து முக்கிய வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்நிலையில் கைகோர்த்த தோனி - குரூனால் பாண்டியா ஜோடி 6 விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்து அணியை சற்று கவுரவமான ஸ்கோர்க்கு அழைத்து சென்றது.
ஆனாலும் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து டி-20 போட்டிகளில் இந்திய அணியின் மோசமான தோல்வியாகவும் இது அமைந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ரன்கள் டோனி அடித்த 39 ரன்கள் தான். நேற்றைய போட்டியில் ‘தோனி’ சர்வதேச டி20 போட்டிகளில் 1500 ரன்களை கடந்து சாதனை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘தோனி’ இதற்கு முன்பாக டி-20 போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ரன்கள் மற்றும் அந்தப் போட்டியின் முடிவுகள்.
2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 48* ரன்கள் (31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).
2012 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 38 ரன்கள் (6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).
2016 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 30 ரன்கள் (47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).
2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 36* ரன்கள் (7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).
2019 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 39 ரன்கள் (80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி).
உலகம் முழுவதிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் வீரராக உள்ள ‘தோனி’ விரைவில் இந்த மோசமான சாதனையை முறியடித்து, இந்திய அணிக்கு சிறப்பான ஒரு வெற்றியை அந்தப்போட்டியில் பெற்றுத் தருவார் என நம்புவோம்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்