பல கோடி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வீரராக யுவராஜ் சிங் உள்ளதால் அவருக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. இந்த மனிதர் தனது வாழ்வில் பல உச்சங்களையும் சரிவுகளையும் சந்தித்துள்ளார். தன் இளம் வயதிலேயே பன்முக திறமைகளை கொண்ட இவர், தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளார். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் தோன்றியுள்ளார். இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்ற இவரது தந்தை,யோக்ராஜ் சிங் அவர்களின் விருப்பத்தின் பேரில் தனது கவனத்தை கிரிக்கெட்டில் செலுத்த தொடங்கினார், யுவராஜ் சிங். இதனால் ஜூனியர் போட்டியில் கலந்துகொண்டு தனது தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கி,பீகார் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணியின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையில் பங்குபெற இடம் கிடைத்தது. மேலும் அந்த தொடரில் நடைபெற்ற 8 போட்டிகளில் 203 ரன்களும் 12 விக்கெட்டுகளும் எடுத்து அந்த தொடருக்கான “தொடர் நாயகன்” விருதை தட்டிச்சென்றார். இதனாலேயே, 2000-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய சீனியர் அணியில் இவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.
1. கென்யா அணிக்கு எதிராக தனது சர்வதேச அறிமுகம் - நைரோபி

ஐசிசி நாக் அவுட் சாம்பியன்ஷிப்பில் கென்யா அணிக்கு எதிராக தான் அறிமுகம் கண்டிருந்தாலும், பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.ஆனால் தனது எக்கனாமிக் பவுலிங்கில் 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் தனது உண்மையான அறிமுகம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடிய ஐசிசி நாக் அவுட் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டி ஆகும். அந்த போட்டியில் இந்திய அணி 92 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது. அப்பொழுது இந்த 18 வயது இளம் வீரர் களம் புகுந்தார். வினோத் காம்ப்ளி மற்றும் ராபின் சிங்குடன் இணைந்து அட்டகாசமான பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி 265 ரன்கள் என்ற சிறந்த ஸ்கோரை இந்திய அணி எட்ட உதவினார். இந்த போட்டியில் என்பது பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். மேலும் இவர் மைக்கேல் பேவனை ரன்அவுட் ஆக்கினார். இந்த போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இவரே ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
2. நாட்வெஸ்ட் டிராபி 2002- இங்கிலாந்து

தனது கனவு அறிமுகத்திற்குப் பின்னர் சில தடுமாற்றங்களால் இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க தவறினார், யுவராஜ் சிங். சௌரவ் கங்குலி இவருக்கு ஜிம்பாப்வே தொடரில் இரண்டாம் வாய்ப்பளித்தார். அந்த தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் 80 மற்றும் 75 ரன்கள் குவித்து, 2002 இங்கிலாந்து சுற்றுபயணத்தில் தனக்கான ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கினார். அந்த தொடரின் முதல் ஆட்டத்திலேயே தனது திறனை வெளிப்படுத்தினார் யுவராஜ் சிங். லார்ட்ஸ் மைதானத்தில் ராகுல் டிராவிட் உடன் இணைந்து 272 என்ற இலக்கை இந்திய அணி வெற்றிகரமாக துரத்திப் பிடிக்க உதவினார். அந்த போட்டியில் இவர் 65 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அந்த தொடர் முழுவதுமே தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்கு ஒரு சிறந்த பினிஷராகவும் உருவெடுத்தார்.
நாட்வெஸ்ட் டிராபியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 326 என்ற இலக்கை துரத்தும் வேளையில் சேவாக் மற்றும் கங்குலி இணை 100 ரன்களை கடக்க, எதிர்பாராத வேளையில் இந்திய அணி 146 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இந்திய ரசிகர்கள் பலரும் நம்பிக்கை இழந்து தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு ஆட்டம் அவ்வளவுதான் என்ற நிலைமைக்கு வந்தனர். யுவராஜ் சிங், முகமது கைப் உடன் பார்ட்னர்ஷிப் உருவாக்கி 6வது விக்கெட்டுக்கு 121 ரன்களை குவித்து, ஆட்டத்தின் போக்கை மாற்றினார். பின்னர் 69 ரன்கள் குவித்த நிலையில் இவர் ஆட்டமிழக்க, முகமது கைஃப் அணியை தூக்கி நிறுத்தி வெற்றி பெறச் செய்தார். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்.
3. ஐசிசி டி20 உலக கோப்பை 2007 - தென் ஆப்பிரிக்கா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்களில் தனது சிறந்த பங்களிப்பால் ஒரு நிலையான இடத்தைப் பிடித்த யுவராஜ் சிங், அக்காலகட்டத்தில் ஒருநாள் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார்.
டி20 உலகக்கோப்பை அறிவிக்கப்பட்ட நேரத்தில், அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் டி20 இந்திய அணியை உருவாக்கினர். எம் எஸ் தோனி அந்த அணிக்கு தலைமையேற்றார். யுவராஜ் சிங் அணிக்கு துணை கேப்டன் ஆனார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவுல்-அவுட் முறையில் இந்திய அணி வெற்றிபெற்றது. பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த தொடரில் நீடிக்க இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது இந்திய அணி. அந்த போட்டியில் ஐந்தாம் இடத்தில் களம் கண்ட யுவராஜ் சிங், இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்து ரசிகர்களை அமர்க்களப்படுத்தினார். 12 பந்துகளில் அரைசதத்தை கடந்து அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 41 ரன்களை குவித்து 2 ஓவர்கள் பந்துவீசி 8 ரன்களை கொடுத்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் பிரெட் லீ வீசிய ஓவரில் 119 மீட்டர் சிக்சரை அடித்து அந்த ஓவரில் 21 ரன்களை குவித்தார். அந்த போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்களை குவித்து இந்திய அணி 188 ரன்களை பெற உதவினார். அந்த போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர் இறுதி போட்டியில் தனது பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்த இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று முதலாவது உலக கோப்பையை உச்சி முகர்ந்தது.
4. ஐசிசி உலக கோப்பை 2011- இந்தியா

இந்த உலகக் கோப்பைக்கு முன்னர் ,அணியில் இடம்பெற சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் டோனியின் நம்பிக்கையால் அணியில் இடம் பெற்றார், யுவராஜ் சிங். கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் யுவராஜ் சிங் இங்கிலாந்து ,அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து அரை சதங்களை அடித்தார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்திய அணி 143 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்தபோது
சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ரன்களை குவிக்க தவறினாலும் தனது பந்துவீச்சில் ஆசாத் ஷபிக் மற்றும் யூனஸ் கான் ஆகியோரின் விக்கெட்களை கபளீகரம் செய்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். பின்னர் இறுதி போட்டியில் இலங்கையை சந்தித்த இந்திய அணி, கம்பீர் மற்றும் தோனியின் அசத்தலான ஆட்டத்தால் தனது இரண்டாவது உலக கோப்பையை வென்றது. இந்த ஆட்டத்தில் தோனிக்கு பின் களமிறக்கப்பட்ட யுவராஜ் சிங், 24 ரன்களை குவித்தார். மேலும் அந்த தொடரில் 4 அரைசதங்கள் ஒரு சதம் உட்பட 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்த யுவராஜ் சிங்” தொடர் நாயகன் “ விருதை தட்டிச்சென்றார்.
5. கேன்சர் நோயுடன் போராட்டம்- 2011 மற்றும் 2012

2011 உலககோப்பை நடக்கும் நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டார் யுவராஜ் சிங் .மேலும் ஒரு போட்டியில் பேட்டிங் செய்யும்போது ரத்த வாந்தியும் எடுக்க நேரிட்டது. இது இந்திய ரசிகர்களுக்கு நெஞ்சை உலுக்கும் சம்பவமாக அமைந்தது. இதனால் அவர் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி சில காலம் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
இதற்காக அமெரிக்காவுக்கு சென்று சில சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு மன தைரியத்துடன் போராடி புற்றுநோயில் இருந்து விடுபட்டார். இதன் காரணமாக இவர் கிரிக்கெட்டை விட்டு ஓராண்டு காலம் விலகி இருந்தார். பின்னர் புற்று நோயால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவ விரும்பி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ” யூ வி கேன் ” (YOU WE CAN) - ஐ நிறுவினார்.
கடும் போராட்டத்திற்கு பின்னர், 2012 நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பினார். தான் இந்திய அணிக்கு அறிமுகமானதை விட கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்து அணியில் இணைந்தது கடினமான காலகட்டமாக இருந்தது என பின்னாளில் குறிப்பிட்டுள்ளார் .
6.2013 மற்றும் 2014 ஆண்டுகளில் ஏற்பட்ட போராட்டம் :

சிகிச்சைக்கு பின்னர் மீண்டு வந்த யுவராஜ் சிங் முன்பு இருந்தது போல் பெரிதும் அணியில் ஜொலிக்கவில்லை. 2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டி20 போட்டியில் 77 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெறச் செய்த போதிலும் பின்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினார். 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 பந்துகளில் 60 ரன்களை குவித்து அந்த லீக் ஆட்டத்தில் அணியை வெற்றி பெறச் செய்தார். பின்னர் இலங்கைக்கு எதிரான உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் 64 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது இந்திய அணி. 11-வது ஓவரில் களம் புகுந்து, இந்த போட்டியில் 21 பந்துகளை சந்தித்த இவர், எந்த ஒரு பவுண்டரியுமின்றி 11 ரன்கள் மட்டுமே குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுக்க நேர்ந்தது.யுவராஜ் சிங்கின் ஆமை வேக ஆட்டத்தினால் இந்திய அணி இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
7. தேர்வாளர்களால் ஓரங்கட்டப்படும் யுவராஜ் சிங் :

சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறார், யுவராஜ் சிங். ஒரு காலத்தில் இவர், இந்திய அணிக்கு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் வெற்றியைத் தேடி தரக்கூடிய வீரராக திகழ்ந்தார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் யுவராஜ் சிங் மீண்டும் இணைந்தார், அணி தடுமாறிய வேளையில் எம்எஸ் தோனியுடன் இணைந்து 256 ரன்கள் என்ற மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பில் 150 ரன்களை குவித்தார். அதே ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 56 ரன்கள் குவித்த போதிலும் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் ரன்களை சேர்க்க தடுமாறினார். மேலும் அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஞ்சாப் அணிக்காக களம் இறங்கிய யுவராஜ் சிங் தொடர் முழுவதும் ரன்களை குவிக்க தவறினார்.
மனதளவில் போராடும் குணம் இருந்தாலும், வயது மற்றும் உடல் தகுதி காரணத்தினால் அணியில் இடம் பிடிக்க இவரால் இயலவில்லை.அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தை கருத்திற்கொண்டு பஞ்சாப் அணி இவரை சமீபத்தில் விடுவித்தது, இவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. மேலும், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இவர் எந்த அணியில் இணையப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அடுத்தாண்டு ஐபிஎல் மட்டுமின்றி உலகக்கோப்பையிலும் மீண்டு வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.அதனை நிறைவேற்றிடும் வகையில் யுவராஜ் சிங் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
