நாங்கள் எந்த அணியையும் குறைவாக மதிப்பிடவில்லை - விதர்பா கேப்டன் ஃபாஸல்

விதர்பா அணியின் கேப்டன் ஃபாஸல்
விதர்பா அணியின் கேப்டன் ஃபாஸல்

விதர்பா அணியின் கேப்டன் ஃபைஸ் ஃபாஸல் பேச்சில் தெளிவும் எளிமையும் காணப்படுகிறது. இந்த எளிமை அவரின் பேட்டிங் மட்டுமல்லாமல் தலைமைப் பண்பிலும் உள்ளது. ஆம், ஃபாஸல் தலைமையிலான விதர்பா அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. நடப்பு சாம்பியனான விதர்பா அணி, இந்த முறை காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களை மிக எளிதாக வென்றது. அதுவும் கேரளாவிற்கு எதிரான அரையிறுதி ஆட்டம் இரண்டு நாளிலேயே முடிவடைந்தது.

இந்த ஆண்டு ரஞ்சி கோப்பையில் இதுவரை 10 போட்டிகளில் 726 ரன்கள் அடித்துள்ள ஃபாஸல், கேரளாவிற்கு எதிராக அரையிறுதியில் தான் அடித்த அரை சதம் மனதிற்கு மிகவும் நிறைவானது என்கிறார். பந்துவீச்சிற்கு சாதகமான வயநாடு பிட்சில் 142 பந்துகளில் 75 ரன் அடித்த ஃபாஸல் கூறுகையில், "அதிகமான ரன்கள் அடிக்க வேண்டும் என்ற வேட்கை எப்போதும் என் மனதிற்குள் இருக்கும். இந்த அரை சதம் சிறப்பானது மட்டுமல்லாமல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகும். ஏனென்றால் நாங்கள் இறுதி போட்டிக்குள் நுழைந்து விட்டோம். இந்த ஆண்டு எல்லா போட்டிகளிலும் எங்கள் அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது" என்றார்.

அரையிறுதியில் ஃபாஸலின் பேட்டிங் விதர்பா அணியின் வெற்றிகு முக்கிய காரணமாக இருந்தது.
அரையிறுதியில் ஃபாஸலின் பேட்டிங் விதர்பா அணியின் வெற்றிகு முக்கிய காரணமாக இருந்தது.

காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவின் பங்களிப்பு விதர்பா அணியின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்தது. காலிறுதி மற்றும் அரையிறுதியில் சேர்த்து மொத்தம் 21 விகெட்டுகள் எடுத்துள்ளார் உமேஷ் யாதவ். உமேஷின் பந்துவீச்சு குறித்து ஃபாஸல் கூறுகையில், "அவரிடம் அபூர்வமான திறமை உள்ளது. 140-145 கிமீ வேகத்தில் தொடர்ந்து பந்து வீசும் போது எந்த பேட்ஸ்மேனும் சிரமப்படுவார்கள். இதை யாதவ் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்".

"வழக்கமாக இந்தியாவில் விளையாடும் போது இதுபோன்று பந்துவீச்சிற்கு உகந்த பிட்ச்கள் கிடைப்பது கடினம். நான் பார்த்தவரையில் இது தான் (வயநாடு) இந்தியாவின் வேகமான பிட்ச். இதில் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஆனால் எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக இருந்து ரன் அடித்தனர்" என்கிறார் உமேஷ் யாதவ்.

அரையிறுதியில் அடைந்த தோல்வி குறித்து கேரள அணியின் பயிற்சியாளர் வாட்மோர் கூறுகையில், "இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. முதல்முறையாக அரையிறுதி வந்த எங்கள் அணி, பலமிக்க அணியோடு தான் தோல்வி அடைந்துள்ளது. எங்கள் அணியின் பேட்டிங்கை இன்னும் சற்று வலுப்படுத்த வேண்டும்" என்றார்.

உமேஷ் யாதவின் அபாரமான பந்துவீச்சு
உமேஷ் யாதவின் அபாரமான பந்துவீச்சு

கடந்த ஆண்டு இறுதி போட்டியில் டெல்லி அணியை வென்று ரஞ்சி கோப்பையை முதல்முறையாக தட்டிச்சென்றது விதர்பா அணி. "நாங்கள் எந்த அணியையும் குறைத்து மதிப்பிடவில்லை. போன முறை அரையிறுதியில் கர்நாடகா அணியை வெற்றி பெற்றோம். ஆகையால் இந்த முறை இறுதி போட்டி எளிதாக இருக்காது. ரஞ்சி கோப்பையை வெல்வது அவ்வுளவு எளிதான விஷயம் அல்ல. நீங்கள் சிறந்த அணியாக இருக்க வேண்டுமென்றால் அதைவிட சிறந்த அணியை தோற்கடிக்க வேண்டும். நாங்கள் அதற்கு தயாராகவே இருக்கிறோம். இரண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு இறுதி போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவோம்" என தன்னம்பிக்கையோடு கூறுகிறார் ஃபைஸ் ஃபாஸல்.

கர்நாடகா மற்றும் சுவுராஷ்டிரா அணிகளுக்கு இடையே நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, பிப்ரவரி மூன்றாம் தேதி தொடங்கும் இறுதிப் போட்டியில் விதர்பா அணியை எதிர்கொள்ளும். இப்போதிருக்கும் ஃபார்மில் விதர்பா அணியே கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

Quick Links

App download animated image Get the free App now