ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளி அட்டவனையில் கடைசி இடம் பிடித்து 2019 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முடித்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று ஹைதராபாத் அணியின் பிளே ஆஃப் வைப்பை கேள்விக்குறியாகியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. மற்றொரு மோசமான ஐபிஎல் தொடராக பெங்களூரு அணிக்கு இந்தாண்டு அமைந்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது வரை பேப்பரில் மட்டுமே சிறந்த அணியாக திகழ்கிறது என அந்த அணியின் முன்னாள் சொந்தக்காரர் விஜய் மல்லையா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணி 2019 ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக ஆரமித்தது. முதல் 6 லீக் போட்டிகளிலும் தொடர் தோல்வியை தழுவியது பெங்களுரு அணி. இவ்வருட ஐபிஎல் சீசனின் மத்தியில் கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை சுவைத்தது பெங்களூரு அணி. பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே பெங்களூரு அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அனுபவ தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நாதன் குல்டர் நில்-ற்கு பதிலாக களமிறங்கினார். அவரது வருகையின் மூலம் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் வெற்றிகளை குவித்தது. இருப்பினும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதன்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டதால் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை முழுமையாக இழந்தது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கனவு கனவாகவே இந்த சீசனிலும் போனது. கடைசியாக பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு 2016 ஐபிஎல் தொடரில் தகுதி பெற்றது. அந்த சீசனில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 4 சதங்களுடன் 973 ரன்களை விளாசித் தள்ளினார். ஆனால் இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியை தழுவியது.
பெங்களூரு அணியின் இந்த மோசமான ஆட்டத்தை தொடர்ந்து, இந்தியாவில் பண மோசடி செய்து விட்டு லண்டனில் வசிக்கும் விஜய் மல்லையா டிவிட்டரின் தனது அனுதாபத்தை பெங்களூரு அணிக்கு தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி நிர்வாகம் விஜய் மல்லையா பற்றிய அனைத்து தகவல்களையும் அணியின் வலைதளத்திலிருந்து நீக்கியிருந்தாலும், தனது முன்னாள் அணியை மறக்கவில்லை.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பற்றி விஜய் மல்லையா சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
"பெங்களூரு அணி அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பேப்பர் தாளில் மட்டுமே சிறந்த அணியாக உள்ளது. என்னுடைய விருப்ப அணியின் மோசமான ஆட்டத்தை கண்டு மிகவும் வருந்துகிறேன்"