இந்திய அணியின் 15பேர் கொண்ட உலகக் கோப்பை அணி அறிவிக்கப்பட்ட பின் அதிக விவாதத்திற்கு உள்ளானது பிசிசிஐ தேர்வுக்குழு. இதற்கு காரணம் அனுபவ வீரர் அம்பாத்தி ராயுடுவிற்கு பதிலாக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்ததே ஆகும். ராயுடு தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாமல் தவறவிட்டார். இதனால் விஜய் சங்கரை இந்திய தேர்வுக்குழு நம்பர்-4 பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளது.
இந்திய தேர்வுக்குழு ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கரை தேர்வு செய்ததற்கான காரணத்தை உடனே தெரிவித்திருந்தது. விஜய் சங்கர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இதுவே இந்திய அணிக்கு உலகக் கோப்பை தொடரில் தேவைப்படுகிறது. இதனால்தான் அம்பாத்தி ராயுடுவிற்கு பதிலாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
"அம்பாத்தி ராயுடுவிற்கு அதிகளவு வாய்ப்புகள் ஏற்கனவே அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் விஜய் சங்கர் தனக்கு அளிக்கப்பட்ட சில வாய்ப்புகளையே சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது மூன்று விதமான ஆட்டத்திறனையும் சரியாக வெளிபடுத்தினார். வெளிநாட்டு மண்ணில் சிறப்பான பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார் விஜய் சங்கர். விஜய் சங்கரை நம்பர்-4 பேட்ஸ்மேனாக தயார் செய்து வருகிறோம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.
இதன்மூலம் ராயுடு உலகக் கோப்பை அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டது தெள்ளத் தெளிவாக அவருக்கு தெரிய வந்ததது. ராயுடு உடனே இந்திய தேர்வுக்குழு அணி நிர்வாகத்தினை ஒரு சிறிய வார்த்தை வடிவில் மறைமுகமாக வெறுப்பேற்றினார். உலகக் கோப்பை அணியிலிருந்து தன்னை நீக்கியதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவினை கண்டு ராயுடு அதிர்சியுற்று டிவிட்டரில் தனது கோபதாபங்களை அரங்கேற்றினார்.
ராயுடு டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது,
"உலகக் கோப்பையைக் காண புதிய 3டி கண்ணாடியை வாங்க பதிவு செய்துள்ளேன்"
இதற்குப் பிறகு விஜய் சங்கர் vs அம்பாத்தி ராயுடு என்ற விவாதம் உலகம் முழுவதும் எழுப்பப்பட்டது. ராயுடுவின் இந்த உடனடி டிவிட் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. 2019ன் தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பி கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட விஜய் சங்கரை எதிர்க்கும் வகையில் ராயுடுவின் இந்த டிவிட் அமைந்துள்ளது.
ராயுடுவின் ஆட்டத்திறன் வெளிநாட்டு மண்ணில் மட்டுமல்லாமல் இந்திய மண்ணிலும் சிறப்பானதாக இல்லை. அதுமட்டுமின்றி அவருக்கு இந்திய அணியில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதன் காரணமாக பிசிசிஐ ராயுடுவை இந்திய அணியிலிருந்து நீக்கியது.
ராயுடுவின் டிவிட்டிற்கு முதன்முதலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு பதிலளித்துள்ளார் விஜய் சங்கர். ராயுடுவின் டிவிட்டிற்கு அவரை காயபடுத்தும் விதத்தில் அல்லாமல் சாதுரியமான பதிலை கவ்ரவ் கப்பூர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் விஜய் சங்கர் தெரிவித்தார்.
"ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடரில் ஒரு வீரர் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அவர்களது மனநிலை எவ்வாறு இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு வீரராக இதை நான் அனுபவித்துள்ளேன். ராயுடுவை தேர்வு செய்யாதத்திற்கு நான் காரணம் என கூறுவது தவறு. அவர் தனது டிவிட்டில் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். ராயுடுவின் மனநிலையை நான் புரிந்து கொள்கிறேன். இது அனைத்து கிரிக்கெட் வீரர்களும் நிகழக்கூடிய சாதரன ஒரு நிகழ்வாகும்.
விஜய் சங்கர் பேட்டிங் பயிற்சியின் போது கலீல் அகமது வீசிய பந்தை எதிர்கொண்டார். அப்போது வலதுகையில் பந்து நேரடியாக தாக்கி காயத்திற்கு உள்ளானார். இதனால் அவரது ஃபிட்னஸ் இந்திய மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இது எலும்பு முறிவு மாதிரி அல்ல, ஒரு சிறு காயம் தான் என பிசிசிஐ விளக்கமளித்து உள்ளது. விஜய் சங்கர் நியூசிலாந்திற்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்திய அணி நியூசிலாந்து அணியுடனான முதல் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.