இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் அறிமுகமாகி, நான்கு மாதங்களுக்குள் உலக கோப்பை அணியில் இடம்பிடித்த விஜய் ஷங்கரின் பயணம் குறிப்பிடத்தக்கது.
தமிழக அணிக்காக விஜய் சங்கர்
2012-ல் தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடித்தபின், விஜய் சங்கரின் கிராப் இறங்கவில்லை. முதல் ரஞ்சி இன்னிங்ஸிலேயே ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் அடித்தவர், அடுத்த போட்டியில் அடித்தது சதம். அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்ளூர் போட்டிகளில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆல் ரவுண்டர். சிலசமயம், லிமிடெட் ஓவர் போட்டிகளில் தமிழகத்தின் கேப்டன். 2014-15 சீசன் அவர் கிரிக்கெட் வாழ்வின் பொற்காலம் என சொல்லலாம். அந்த வருடம் நடந்த ரஞ்சி சீசனின் நாக்-அவுட் போட்டிகளில் 111, 82, 91, 103 ரன்கள் அடித்ததோடு, கணிசமான விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். அந்த சீசனில் அவரது சராசரி 57.7 இதைப் பார்த்து ‘இந்தா பிடி’ எனச் சிறந்த பிளேயர் வீரர் விருதை வழங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில் (TNCA).
பின்னர் மூன்று வருடங்களுக்கு முன்பு இந்திய ஏ அணிக்கு தேர்வான விஜய் சங்கர் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பை இழந்தார். இவருக்கு மாற்று வீரராக ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய ஏ அணியில் இடம் பெற்றார்.
இழந்த வாய்ப்பை மீட்ட சங்கர்
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதற்கு ஏற்றார்போல கடந்த ஆண்டு ஆசியா கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் முதுகுவலியால் அவருக்கு பதில் இந்திய அணியில் இடம் பிடித்தார் விஜய் சங்கர். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தேசிய அணியில் தனக்கான இடத்தையும், இந்திய அணியின் நீண்ட நாள் குறையாக இருந்த வேகப்பந்து வீச்சாளருக்கான ஆல்ரவுண்டர் இடத்தையும் நிரப்பினார்.
சில மாதங்களுக்கு முன்பு பாண்டியா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கான மாற்று வீரராக இந்திய ஒருநாள் அணியில் விஜய் சங்கர் இடம் பெற்றார்.
இந்திய அணியில் விஜய சங்கர் இடம்பெற்றதற்கான காரணங்கள்
மிடில் ஓவர்களில் நிதானமாகவும் தேவைப்பட்டால் அடித்து ஆடும் திறன் கொண்டவர்.இந்திய ஏ அணிக்காக வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்தியாவின் நீண்ட நாள் குறையான நான்காவது வரிசை பேட்டிங் ஆட வாய்ப்புள்ளவர்களில் இவரும் ஒருவர். அம்பதி ராயுடுவின் மோசமான பார்ம் காரணமாக இவர் அவரை முந்தியுள்ளார்.
விஜய் சங்கர் மூன்று பிரிவிலும் (பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங்) சிறந்து விளங்குவதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் விளக்கம் அளித்திருந்தார். விஜய் சங்கர் குறித்து ஆங்கிலத்தில் ‘‘Vijay Shankar offers is three dimension’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கனவு நனவானது
உலக கோப்பை இந்திய அணியில் தேர்வானது பற்றி சங்கர் தனது "கனவு நிஜமாகியுள்ளது. உலகக் கோப்பை போன்ற போட்டி தொடர்களில் அழுத்ததை எப்படி கையாளவேண்டும் என்பதை, ஐபிஎல் அணியின் சக வீரரான புவனேஷ்வர் குமார் போன்றவர்களிடமிருந்து கற்றுகொள்கிறேன் என்றார். .