இந்த ஐபிஎல் 2019- இல் விராட் கோலியின் ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்’ (ஆர்.சி.பி) அணி தொடர்ச்சியாக அடிமேல் அடி வாங்கி வருகிறது. அணியில் டிவில்லியர்ஸ், ஹெட்மயர், ஸ்டோய்னஸ், சஹால் போன்ற சிறப்பான வீரர்கள் இருந்தும் அந்த வீரர்கள் வெற்றிக்காக ஒருங்கிணைந்து விளையாடாததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் ‘விராட் கோலி’யின் மோசமான கேப்டன்ஷிப் தான் ‘ஆர்.சி.பி’ அணியின் தொடர் தோல்விகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.
உதாரணமாக ‘சென்னை சூப்பர் கிங்சு’க்கு எதிரான முதல் போட்டியில் சுழலுக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்த சென்னை பிட்ச்சை சரிவரப் புரிந்து கொள்ளாமல் அணியில் அதிக வேகப்பந்து வீச்சாளர்களை சேர்த்து, அந்தப் போட்டியில் சென்னையின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக 70 ரன்களுக்கு சுருண்டு பரிதாப தோல்வி அடைந்தது பெங்களூர் அணி.
அடுத்ததாக ஐதராபாத் ‘சன் ரைசர்ஸ்’ அணிக்கு எதிரான போட்டி. இதிலும் கோலி தனது கேப்டன்ஷிப்பில் தடுமாறினார். பேட்டிங்கிற்கு சாதகமான ஹைதராபாத்தில் டாசில் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் கோலி. இதன் பலனை உடனடியாக அனுபவிக்கவும் செய்தார். ‘சன்ரைசர்ஸ்’ அணியின் தொடக்க ஜோடி, ஐபிஎல் வரலாற்றின் சாதனை தொடக்க ஜோடியாக மாறியது.
‘ஜானி பேர்ஸ்டோ’வின் 114 ரன்களை கூட தொட முடியாமல் பெங்களூர் அணி 113 ரன்களுக்கு சுருண்டு 118 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது. இதேபோன்ற ஒரு தவறை நேற்றைய ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியிலும் செய்தார் கோலி.
ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில்தான் நேற்று களமிறங்கின. பெங்களூர் அணியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ‘மார்கஸ் ஸ்டோய்னஸ்’ களமிறங்கியது ஆர்.சி.பி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’ அணியின் சுழற்பந்துவீச்சாளர் ‘ஸ்ரேயாஸ் கோபால்’ ஆரம்பத்திலேயே பெரிய செக் வைத்தார். இவரின் சூழலில் விராட் கோலி, டிவில்லியர்ஸ் மற்றும் ஹெட்மயர் சிக்கிக்கொள்ள ஆர்.சி.பி தடம் புரண்டது. இருப்பினும் பின்வரிசை வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் பெங்களூர் அணி 158 ரன்கள் சேர்த்தது.
158 ரன்களுக்குள் ராஜஸ்தான் அணியை கட்டுப்படுத்த வேண்டும் என களமிறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் விராட் கோலி தனது மோசமான கேப்டன்ஷிப் மூலம் ஆப்பு வைத்தார். முன்னதாக ‘ஸ்ரேயாஸ் கோபால்’ சுழற்பந்து வீச்சில் என்ன மாதிரியான தாக்கம் இருந்தது என்பதை கோலி புரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ‘ஜோஸ் பட்லர்’ ஆரம்பகட்ட சுழற்பந்து வீச்சில் தடுமாற கூடியவர்.
இதனைப் புரிந்துகொண்டு தனது பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான ‘சாஹால்’ மற்றும் ‘மொயின் அலி’ ஆகியோரை ஆரம்பத்திலேயே கோலி பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் இதனை செய்யாமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் பட்லர் மற்றும் ரஹானே சுலபமாக ரன்கள் சேர்த்தனர்.
இதன் பிறகு தாமதமாக பந்துவீச வந்த ‘சஹால்’, ரஹானே மற்றும் பட்லரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார் ஆனால் அதற்குள் ஆட்டம் ஆர்.சி.பி-யின் கையை விட்டுப் போயிருந்தது. பின்னர் களம் புகுந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் திரிபாதி சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
விராட் கோலி தனது சுழற்பந்து வீச்சாளர்களை ஆரம்பத்திலேயே பயன்படுத்தியிருந்தால், பட்லரின் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்த ஒரு வாய்ப்பு இருந்திருக்கக்கூடும். மேலும் ஆட்டத்தின் போக்கே மாறி இருக்கலாம்.
தனது மோசமான கேப்டன்ஷிப் மூலம் அணியின் வெற்றியை தொடர்ந்து தாரை வார்த்து வருகிறார் விராட் கோலி. தற்போது பெங்களூர் அணி ஆடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. தனது ‘கேப்டன்ஷிப்’ தவறுகளை திருத்திக் கொண்டு சரியான கலவையில் அணியை உருவாக்கி ஆர்.சி.பி அணியை கோலி முன்னோக்கி கொண்டு போவாரா என்பதே ‘ராயல் சேலஞ்சர்ஸ்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.