உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகு, இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்க உள்ளதாக இந்திய தேர்வு கமிட்டி தெரிவித்துள்ளது.
இவ்விரு வீரர்களும் தொடர்ந்து குறுகிய கால கிரிக்கெட்டில் விளையாடி வருவதால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஏதுவாக இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் என குறுகிய கால தொடர் முடிந்த பிறகு, இரு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த இரு டெஸ்ட் போட்டிகளும் முதன்முதலாக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாகும். இந்த வருடம் பலதரப்பட்ட சர்வதேச போட்டிகளில் இந்திய அணி விளையாடி உள்ளது. இதனால் மூத்த வீரர்களுக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. எனவே, அவர்கள் புத்துணர்ச்சியுடன் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களில் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகிய இருவரும் ஓய்வு அளிக்க உள்ளனர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இவர்கள் இருவரும் ஓய்வில் இருப்பார்கள்.
"ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விராட் கோலி தொடர்ந்து விளையாடி வருகிறார். இவர் மட்டுமல்லாது, பும்ராவின் பணிச்சுமையை அணி நிர்வாகம் தற்போது கருத்தில் கொண்டுள்ளது. இவர்கள் இருவரும் இந்த ஓய்வுக்குப் பின்னர், டெஸ்ட் போட்டிகளில் இணைவார்கள்"
என பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகி ஒருவர் நியூஸ் 18 தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
டெஸ்ட் தொடர்களில் பலம் வாய்ந்த அணியாக இந்திய அணி திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு முடிவுகளின்படி, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ பேசி உள்ளபடி குறுகிய கால தொடருக்கு பின்னர், டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். இதனால், சிறிதளவு ஓய்வு அணியின் மூத்த வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
தற்போது உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் அணியின் முக்கிய வீரர்கள் ஓய்வு அளிக்கப்பட்டபின்னர், ஆகஸ்ட் 22ஆம் தேதி ஆண்டிகுவாவில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அணியில் இணைய உள்ளனர் எனவும் பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார். இவ்வருடம் பற்பல சர்வதேச போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளதால் அணி வீரர்களுக்கு காயம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, அணி வீரர்களின் பணிச்சுமையை குறைப்பது தேர்வுக் குழுவினரின் முக்கிய பணியாகும்.
தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கூட கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷிகர் தவான் தொடரில் இருந்து விலகியுள்ளார். மேலும் வேகப்பந்து, வீச்சாளரான புவனேஷ்வர் குமார் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக மூன்று போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.