மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஜொலித்தார் வேக பந்துவீச்சாளர் பும்ரா. கேப்டன் விராட் கோஹ்லி அந்நிய மண்ணில் அதிக வெற்றி பெற்ற முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை சமன் செய்தார்.
போட்டியின் நாளாவது நாளான நேற்று இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களுக்கு சுருட்டியது. இந்த வெற்றியுடன் விராட் கோஹ்லி அந்நிய மண்ணில் மொத்தமாக 11 டெஸ்ட் வெற்றிகளை 24 போட்டிகளில் பதிவு செய்தார். ஆனால் கங்கூலி 28 டெஸ்ட் போட்டிகளில் இதே எண்ணிக்கையிலான வெற்றியைப் பெற்றார்.
மேலும் 150 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா , இங்கிலாந்து , மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றிற்கு அடுத்து ஐந்தாவதாக இந்த இலக்கை அடைந்துள்ளது. 1978ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.
ஸ்கோர் போர்டு விபரம்
இந்திய அணி முதல் இன்னிங்சில் 443/7 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தரப்பில் புஜாரா 106,கோஹ்லி 82,அகர்வால் 76 மற்றும் ரோஹித் ஷர்மா 63 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த முதல் சதம் இது. மொத்தத்தில் அவர் அடித்த 17 வது டெஸ்ட் சதம் இதுவாகும். கம்மின்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட் சாய்த்தார்.
இரண்டாவது இன்னிங்சில் தடுமாறிய இந்திய அணி 106 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட் இழந்து டிக்ளேர் செய்தது. அகர்வால் , விஹாரி , பாண்ட் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு விளையாடிய எதிரணி 261 ரன்னில் சுருண்டது. கம்மின்ஸ் 63, மார்ஷ் 44, ஹெட் 34 மற்றும் கவாஜா 33 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா மற்றும் ஜடேஜா தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரிட் பும்ரா ஆட்ட நாயகன் விருதை பெற்றார். ஆஸ்திரேலிய மண்ணில் 9 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்னும் பெருமையையும் பும்ரா பெற்றார்.
4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி 3 தேதி நடக்கவுள்ளது. அந்த போட்டியிலும் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் அது ஒரு சாதனையாக அமையும். போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்க இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.