கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் முக்கியமான வீரர் விராட் கோலி. நவீன கால கிரிக்கெட் சகாப்தத்தில் இன்றியமையாத வீரராகவும் பல சாதனைகளை முறியடிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் விளங்கிவருகிறார், விராட் கோலி. இது மட்டுமல்லாது, பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கூட அதிவேகமாக 11,000 ஒருநாள் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார், விராட் கோலி.
அதேபோல், கேப்டன்சியில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை கண்டு வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது தலைமையில் விளையாடிய இந்திய அணியின் வெற்றி சதவீதம் 70-க்கும் மேல் உள்ளது. இது கடந்த கால சிறந்த கேப்டன்களில் காட்டிலும் இது சிறந்த கேப்டன்ஷிப் சாதனையாகும். இவரைப் போலவே இவரது அணியினரும் உலகத்தரம் வாய்ந்தவர்களாக உள்ளனர். இந்திய அணிக்கு ஒரு நல்ல கேப்டனாகவும் உள்ள இவருக்கு பக்கபலமாக ஆட்டத்தின் வெற்றியை தேடித்தரும் வீரரான ரோகித் சர்மா, தோனி, பும்ரா போன்ற வீரர்களால் இவரது கேப்டன் பணி சிறக்கிறது. அதோடு, அனுபவம் வாய்ந்த தோனியின் ஆலோசனைகள் இவரது வெற்றிக்கு கூடுதல் வலு சேர்க்கின்றது. அதேபோல், ஐபிஎல் தொடர்களில் நான்கு முறை சாம்பியன் பட்டங்களை வென்று தந்த ரோகித் சர்மாவின் அனுபவமும் இவருக்கு கை கொடுக்கின்றது. தோனி மற்றும் விராட் கோலியின் புரிந்துணர்வு இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு எவ்வித சந்தேகமின்றி முக்கிய காரணியாக அமைகின்றது. இதனால், கோலியின் வியூகங்கள் மற்றும் யுத்திகளும் போட்டிகளில் அவ்வப்போது வெளிப்பட்டு தவறுகள் நேரா வண்ணம் இருக்கின்றது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் புஜாரா நீக்கப்பட்டு 2 சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடினது விராத் கோலியின் தவறான கேப்டன்சி நகர்வை வெளிக்காட்டியது. தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் இந்திய டெஸ்ட் அணி நடத்தி வரும் விராட் கோலி, கடந்த இரு வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட்டின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். களத்தில் ஏதேனும் சிக்கல் அல்லது நெருக்கடி ஏற்பட்டால் விக்கெட் கீப்பர் தோனியிடம் அவ்வப்போது ஆலோசனைகளைக் கேட்டு முக்கியமான முடிவினை தேர்ந்தெடுக்கிறார், விராட் கோலி.
இருப்பினும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக கோப்பை தொடரில் விராத் கோலியின் முடிவுகளில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஐபிஎல்-லில் சிறந்து விளங்கிய முகமது சமி ஆடும் லெவனில் இன்னும் இடம் பெறாமல் உள்ளார். அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் அணியில் இடம்பெற்று தொடர்ந்து விளையாடி உள்ளார். இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ளார் புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோரையே விராத் கோலி நம்புவதை இது வெளிக்காட்டுகிறது. ஆனாலும் விராத் கோலியின் நம்பிக்கையின் பேரில் விளையாடிய புவனேஸ்வர் குமார், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இரு விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். துரதிஸ்டவசமாக, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது மூன்றாவது ஓவரை வீச அந்த ஒரு புவனேஸ்வர் குமார் வலது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு போட்டியிலிருந்து விலகினார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி ஏழாவது முறையாக உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்றது இந்திய அணி போட்டி நடைபெறுவதற்கு முன்தினம் கடும் மழை பெய்த போதிலும் விராட் கோலி ஆடும்லெவனில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளரை இணைக்கவில்லை. அதற்கு மாறாக, தொடர்ந்து குல்தீப் யாதவை அணியில் நீடிக்க செய்தார். இவர் எடுத்த இந்த தீர்க்கமான முடிவால் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவும் பாகிஸ்தான் அணியின் முக்கிய இரு பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். அதேபோல், புவனேஸ்வர் குமார் காயத்தால் ஆட்டத்தில் இருந்து வெளியேறியபோது அனைவரையும் ஆச்சரியமளிக்கும் வகையில் ஆல்ரவுண்டர் விஜய் ஷங்கரை முதல் முறையாக ஓவர் வீசும் படி பணித்தார், விராட் கோலி. அதன்பிறகு பந்து வீசிய விஜய் சங்கர் தமது முதல் பந்திலேயே விக்கெட்டை கைப்பற்றி ரசிகர்கள் அனைவருக்கும் ஆச்சர்யமளித்தார், விஜய் சங்கர்.
உண்மையில் இது போன்ற பக்குவமான தலைமைப்பண்பு விராட் கோலியிடம் வெளிப்பட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரான ரபாடா விராட் கோலி ஒரு பக்குவமற்ற வீரர் என்று சாடியுள்ளார். இதனை கண்டாவது இனிமேல் அவர் இத்தகைய வார்த்தைகளை கூற மாட்டார் என நம்புவோம். ஒரு கேப்டனாகவும் ஒரு தலைவராகவும் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பயணிக்க உள்ள விராட் கோலி, இன்னும் பல முயற்சிகளை மேற்கொண்டு இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு காரணமாய் அமைவார் என்பது இவரது பல ரசிகர்களின் விருப்பம் ஆகும். வெறும் கேப்டன்சியில் மட்டும் அல்லாது பேட்டிங்கிலும் ஆதிக்கத்தை செலுத்தி பல்வேறு சாதனைகளை புரிவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.