ஹார்த்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள். இருவரும் சிறந்த பேட்ஸ்மென்கள். அதிலும் கார்த்திக் பாண்டியா சிறந்த ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் உள்ளார். இவ்வாறு வளர்ந்து வரும் இவர்கள் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியில் அவர்கள் பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்த சர்ச்சையை பற்றி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி என்ன தெரிவித்துள்ளார் என்பதை இங்கு விரிவாக காண்போம்.
ஹார்த்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்பு நடந்த "காபி வித் கரன்" என்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது பாண்டியா எல்லை மீறி பெண்கள் மற்றும் தன் பழக்க வழக்கம் பற்றி பேசினார். பாண்டியா மற்றும் ராகுல் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல தகவல்களை "காபி வித் கரன்" நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். ராகுல் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஆகாவிட்டாலும், பண்டியா பேசிய சில விஷயங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சந்தித்தது. இந்நிலையில் பிசிசிஐ இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்தது. இந்த விசாரணைக்கு பிறகு இருவருக்கும் சில போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்தது.
இந்த சர்ச்சையை குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் என்ன என்றால், "அவர்கள் பேசியதற்கு இந்திய அணி பொறுப்பாகாது. நாங்கள் இந்திய அணி என்ற முறையிலும், பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையிலும் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தனிப்பட்ட கருத்து. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம் என தெரிவித்தார். இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களின் நம்பிக்கையை மாற்றாது. இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்ட உடன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
மேலும், ஜடேஜா மற்றும் குல்தீப் இருவரும் சிறந்த பிங்கர் ஸ்பின்னர் - ரிஸ்ட் ஸ்பின்னர் கூட்டணியாக இருக்கிறார்கள். ஜடேஜா நல்ல ஆல்-ரவுண்டராகவும் இருப்பதால், பண்டியா இல்லாவிட்டால் அந்த இடத்தை ஜடேஜா நிரப்புவார் என கூறினார். கோலியை பொறுத்தவரை இந்தியா தற்போது உலகக்கோப்பையை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது. அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா என வரிசையாக ஒருநாள் தொடர்களில் பங்கேற்று சிறந்த வீரர்களை, சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கூட்டணியை அடையாளம் காணும் முயற்சியில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் பாண்டியா மற்றும் ராகுலுக்கு ஆதரவு அளித்தால் அது அணிக்குள் குழப்பத்தை உண்டாக்கலாம். மற்ற வீரர்களையும் இந்த விவகாரத்தில் இழுத்து விட்டது போல ஆகிவிடும். ரசிகர்களும் இந்திய அணிக்கு எதிராக திரும்பி விடுவார்கள். அதையெல்லாம் மனதில் வைத்து மற்ற வீரர்களை இந்த விவகாரத்தில் இருந்து தள்ளி வைத்துப் பேசியுள்ளார் கோலி. அவர்கள் இல்லை என்றாலும் அணியில் எந்த இழப்பும் இல்லை எனக் கூறி அணி நிலையாக இருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் ஹார்த்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை தொடர வேண்டும் என்றால் இது போன்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசாமல் இருப்பது நல்லது.