இந்தியா vs ஆஸ்திரேலியா தொடரானது தொடங்கிய முதலிருந்தே ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. அனல் பறக்கும் ஆட்டமும் வார்த்தை சண்டைகளும் இடம்பெற்றிருப்பதே ஆட்டங்களில் விறுவிறுப்பை கூட்ட செய்கின்றன.
டெஸ்ட் தொடருக்கு முன்பு நடந்த டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு எகிறிருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நடந்தது. சிறப்பான பந்து வீச்சு மற்றும் பூஜாராவின் அபார ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஆகவே இரண்டாவது போட்டியில் களம் காண உத்வேகத்துடன் இருந்தது இந்திய அணி. பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.
இதுமட்டுமில்லாமல், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் ஆஸ்திரேலியா கேப்டனான டிம் பெய்னுக்கும் வார்த்தைப் போர் நிலவி வந்தது. இவ்விரு வீரர்கள் ஆட்டக்களத்தில் பரிமாறிய வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தன. பொதுவாகவே விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக தென்படுவார். ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டாக மட்டும் கருத மாட்டார்கள், சண்டையிடும் போருக்கு நிகரான இடமாக கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்கக் கூடியவர்கள். கிரிக்கெட் மட்டுமல்லாது வார்த்தை போர்களும் அடிக்கடி நிகழ்வது வழக்கம். அதில் ஆஸ்திரேலிய வீரர்களை தவிர்த்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கைகளும் எதிரணியை துவைத்து போடும் என்பது தனி கதை.
பின்னணி...
கடந்த காலங்களில், இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டால் தோல்வியை தழுவி பெரும் விமர்சனங்களுக்கு ஆளாக்கப்படும். இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் வார்த்தைகளை பெரும்பாலும் தவிர்த்து ஆட்டத்தில் கவனம் செலுத்துவர். ஆனால் இம்முறை தலைகீழாக ஆஸ்திரேலியாவை விட இந்தியா ஆக்ரோஷமாக களத்தில் தென்படுவது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் ஆக்ரோஷமானது, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியினிடமே தொடங்குகிறது. ஏனெனில் விராட் கோலி ஆக்ரோஷத்தின் மூலம் உத்வேகத்தை பெறக்கூடிய ஒரு வீரர். அணி வீரர்கள் துவண்டு போய் இருக்கும் பொழுது தனது ஆக்ரோஷத்தின் மூலம் உத்வேகம் கொடுப்பவர் கோலி.
மையக்கருத்து
நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டியை குறித்து ஆஸ்திரேலியா சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வார்னே கருத்து கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது “இந்த டெஸ்ட் தொடர் சிறப்பான நிலையில் அமைந்திருக்கிறது. 1-1 என்று இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. தொடரின் விறுவிறுப்பிற்கு மிக முக்கிய காரணம் இந்த மனிதன் தான் …. விராட் கோலி. விராட் கோலி தற்பொழுது இந்த கிரகத்தின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
மேலும், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கும் மெல்போர்ன் நகரை “உலக விளையாட்டு போட்டிகளுக்கான தலைநகரம்” என்று பெருமையாக கூறிய வார்னே “மெல்போர்ன் நகரை நான் பெரிதும் நேசிக்கிறேன், உலக விளையாட்டு போட்டிகளின் தலைநகராக இருக்கும் இந்நகரத்தில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் (MCG) எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இங்கு நாங்கள் பாக்ஸிங் டே கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல்நாளில் பங்கேற்று, ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் போட்டிகளின் சிறந்த நாளை கொண்டாடுவோம்.” என்று கூறினார்.
“80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஸ்டாண்ட்களில் ஆரவாரத்துடன் பங்கேற்று, உலக ரசிகர்கள் பார்த்துக் கொண்டும், கேட்டுக்கொண்டும் இப்போட்டிகளின் மூலம் மகிழ்வர். இங்குதான் சரித்திரம் உருவாக்கப்படுகிறது” என்று பெருமையாக தெரிவித்தார் வார்னே.
அடுத்தது என்ன ?
வார்னே கூறியதைப்போல் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. பல மாற்றங்களை எதிர்கொண்டு இந்தியா களமிறங்க உள்ளது. இரு அணிகளும் சம நிலையில் இருப்பதால் யாருக்கு வெற்றி என்பதில் தான் சுவாரஸ்யம். அனல் பறக்கும் ஆட்டமும், ஆக்ரோஷமான செயல்பாடுகளும் இப்போட்டியில் இடம்பெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.