உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் ஐபிஎல் திருவிழா இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. அனைத்து அணிகளும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற கடுமையாக போராடி வருகின்றன. இவ்வாறு அரங்கேறும் இந்த போட்டிகளில் அவ்வப்போது பல சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளன, ஆனால் அவையெல்லாம் கிரிக்கெட் களத்திற்குள்ளே நடப்பது. கிரிக்கெட் களத்திற்கு வெளியே எந்த வித சர்ச்சைகளும் இன்னும் வெடிக்கவில்லை.
ஏன்? என்ன காரணம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த ஐபிஎல் தொடரானது இந்தியாவில் நடந்து வருகிறது. இதே சமயத்தில் தான் இந்தியாவின் முக்கிய ஜனநாயக நிகழ்வாக பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இது போன்ற நிலையில் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் இருமுறை தென் ஆப்பிரிக்கா மற்றும் அரபு எமிரேட்ஸ்க்கு மாற்றபட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த முறை அதே போன்று வெளிநாட்டில் நடத்தபடும் என எதிர்பார்த்த வேளையில் ஐபிஎல் கமிட்டியின் துரித செயலால் இந்தியாவிலேயே முழுமையாக நடத்த திட்டம் வகுக்கப்பட்டது.
பின்பு சரியான முறையில் திட்டமிட்டு 56 லீக் போட்டிகளுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் எந்த வித பிரச்னையும் இன்றி தற்போது இரண்டாவது வாரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
ஆனால், அசம்பாவிதம் என்பது எதிர்பாராமல் நடக்க கூடிய ஒன்றாகும். எடுத்து காட்டாக, கடந்த முறை நடந்த CSK vs KKR போட்டியை கூறலாம். சில அரசியல் உட்கட்டமைப்பு பிரச்சனை காரணமாக அங்கு நடந்த வேண்டிய போட்டிகளை அவசர அவசரமாக புனேவிற்கு மாற்றப்பட்டது.
இதே போன்ற ஒருநிலை இந்த முறை ஏற்பட்டால் என்னசெய்வது என்று முடிவு செய்து ஐபிஎல் நிர்வாகம் ஒரு தீர்வை கொண்டுள்ளது. ஆம், எதாவது ஒரு சூழலில் பிரச்சனை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டால் உடனே அந்த போட்டிகளை வேறு ஒரு மைதானத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. அந்த ஆடுகளமானது விசாகபட்டதில் அமைந்துள்ள ACA_VDCA மைதானமாகும்.
தற்போது அரசியல் நிலவரப்படி அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரங்களே நடந்து வருகின்றன. ஏப்ரல் 11ற்கு மேல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றது, அதாவது மே 19 வரை. எனவே தேர்தல் நடைபெறும் பொழுது பாதுகாப்பு பிரச்சனைகளோ, அல்லது அரசியல் சம்பத்தப்பட்ட தாக்குதல்களோ ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.
எனவே இந்த நிகழ்வுகளை கணக்கில் கொண்டு ஐபிஎல் நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. அது மட்டுமின்றி தேவைப் படும் பட்சத்தில் மாற்று ஆடுகளமாக புனே கூட மீண்டும் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாகபட்டினம் ஆடுகளம் ஒரு பார்வை:
இது 25,000 இருக்கைகள் கொண்ட பெரிய ஆடுகளம், மேலும் தற்போது தான் இதன் புனரமைப்பு பணி முடிவடைந்துள்ளது. இங்கு பல சர்வதேச போட்டிகளும் அரங்கேறியுள்ளன.
டி-20 ரெகார்ட் பார்க்கையில் இது மிகவும் மெதுவான ஆடுகளமாக தான் காட்சியளிக்கிறது. மேலும் இதற்கு முன் இங்கு இரண்டு ஐபிஎல் போட்டிகளும் நடத்தபட்டுள்ளன. அதாவது 2016ம் ஆண்டு மும்பை மற்றும் ரைசிங் புனே அணிக்கும் இங்கு போட்டிகள் நடத்தப் பட்டுள்ளன. இரு அணிகளும் தலா மூன்று முறை இங்கு வேறு அணிகளுடன் விளையாடி உள்ளன. டோனி அக்சார் படேல் ஒவரில் 4 சிக்ஸர்கள் அடித்து முடித்து வைத்த போட்டி இங்குதான் அரங்கேறியது.
எனவே இந்த முறை மாற்று ஆடுகளம் தேவைப்படும் பட்சத்தில் போட்டிகள் இங்கு நடைபெறலாம். மேலும் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று பிளே-ஆப் சுற்றுக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.