பாகிஸ்தான் ரசிகர்களால் "புரேவாலா எக்ஸ்பிரஸ்" என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவர் வக்கார் யூனிஸ். அனைத்து அணிகளின் பேட்ஸ்மேன்களையும் தனது வேகப்பந்துவீச்சால் அச்சுறுத்தியவர். 2001 முதல் 2003 வரை பாகிஸ்தான் அணியின் கேப்டனாகத் திகழ்ந்தவர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தமாக டெஸ்டில் 373 விக்கெட்டுகள் மற்றும் ஒரு நாள் போட்டியில் 416 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 2018-இல் சில்ஹெட் சிக்சர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
வக்கார் தேர்வு செய்த கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த 11 வீரர்கள்,
1. சர் டான் பிராட்மேன் (Sir Donald Bradman)
கிரிக்கெட் உலகின் "டான்" என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர், அவரது காலத்தின் சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தவர். அவரது டெஸ்ட் பேட்டிங் சராசரியான 99.94 இன்று வரை யாராலும் மிஞ்ச முடியாத ஒரு மைல்கல். தனது கரீயரில் மொத்தமாக 6996 ரன்கள் குவித்தார். தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் அவரது சராசரி 100 ஆக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2009ஆம் ஆண்டு ஐ.சி.சி " ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார்.
2. மாத்யூ ஹைடன் (Matthew Hayden)
தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிந்தவர் ஹைடன். டெஸ்டில் ஓபனர் ஆகக் களமிறங்கி அசத்திய இவர், தனது டெஸ்ட் கரீயரில் 8625 ரன்கள் குவித்தார். அவரது அதிகபட்ச ஸ்கோரை (380) ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பெர்த் மைதானத்தில் பதிவு செய்தார். 2003 மற்றும் 2007-இல் உலக கோப்பையைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியில் முக்கிய பங்காற்றினார். 2003-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
3. ப்ரையன் லாரா (Brian Lara)
"ப்ரின்ஸ்" என்று கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், ஆட்டத்தின் போக்கை நொடிப் பொழுதில் மாற்றும் வல்லமை படைத்தவர். டெஸ்டில் மொத்தமாக 11912 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் லாராவுக்குத் தான் முதலிடம். டெஸ்டில் இவர் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 400* தான் ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர். 2012-ஆம் ஆண்டு ஐ.சி.சி " ஹால் ஆப் பேமில் " இடம் பெற்றார். 1995-ஆம் ஆண்டின் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
4. சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar)
கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஆடுகளத்தில் புரிந்த சாதனைகளுக்கு அளவே கிடையாது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கே முதலிடம். 2003 உலக கோப்பையின் சிறந்த வீரராகத் தேர்வுச் செய்யப்பட்டார். 1992 முதல் 2011 வரை மொத்தம் ஆறு உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த பெருமை இவருக்குச் சொந்தம். 1997-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
5. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் (Sir Vivian Richards)
"மாஸ்டர் பிளாஸ்டர்" ரிச்சர்ட்ஸை கண்டு அஞ்சாத பவுலரே இல்லை. தன் கரீயரில் மொத்தம் 8540 ரன்கள் குவித்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 291. அவரது டெஸ்ட் சராசரி 50.24, ஸ்டிரைக் ரேட் 86.07. 2009-ஆம் ஆண்டு ஐ.சி.சி "ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார். 1977-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
6. சர் கர்பீல்ட் சோபர்ஸ் (Sir Garfield Sobers)
சோபர்ஸ் தனது காலத்தின் நிகரில்லா ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார். டெஸ்டில் மொத்தம் 8032 ரன்கள் குவித்தார் மற்றும் 235 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது அதிகபட்ச ஸ்கோர் பாகிஸ்தானுக்கு எதிராக கிங்ஸ்டனில் அடித்த 365*. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசிய வீரர் இவரே. 2009-ஆம் ஆண்டு ஐ.சி.சி "ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார். 1964-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
7. ஆடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist)
கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனின் ரோலை மாற்றி எழுதிய பெருமை கில்கிறிஸ்டையே சாரும். பவுச்சருக்கு பிறகு டெஸ்டில் அதிக கேட்ச்களைப் பிடித்த விக்கெட் கீப்பர் இவர் தான். இவரது அதிகபட்ச ஸ்கோர் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 2002-இல் அடித்த 204*. 2013-ஆம் ஆண்டு ஐ.சி.சி "ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார். 2002-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
8. இம்ரான் கான் (Imran Khan)
கரீயரின் தொடக்கத்திலிருந்து தான் ஓய்வு பெற்ற நாள்வரை பாகிஸ்தான் கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் இம்ரான் கான். டெஸ்டில் மொத்தம் 3807 ரன்கள் குவித்தார் மற்றும் 362 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது சிறந்த ஸ்பெல் இலங்கை அணிக்கு எதிராக லாகூரில் கைப்பற்றிய 8/58. அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 136. 2009-ஆம் ஆண்டு ஐ.சி.சி "ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார். 1983-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
9. வாசிம் அக்ரம் (Wasim Akram)
பல ஜாம்பவான்களால் கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சுவிங் பவுலர் என்ற பட்டம் வாங்கியவர் வாசிம் அக்ரம். டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர் அக்ரம் தான். இவரது அதிகபட்ச ஸ்கோர் ஜிம்பாப்வேக்கு எதிராக அடித்த 257* ரன்கள். அவரது சிறந்த ஸ்பெல் நியூசிலாந்துக்கு எதிராகப் பதிவு செய்த 7/119. 2009-ஆம் ஆண்டு ஐ.சி.சி "ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார். 1993-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
10. ஷேன் வார்ன் (Shane Warne)
கிரிக்கெட்டின் "மெஜிசியன்" என்று அழைக்கப்படும் வார்ன் தனது பந்துவீச்சால் பல பேட்டிங் ஜாம்பவான்களைத் திணறடித்தவர். இவரது சிறந்த ஸ்பெல் இங்கிலாந்துக்கு எதிராகப் பதிவு செய்த 8/71. 2013-ஆம் ஆண்டு ஐ.சி.சி "ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார் .1994-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
11. க்லென் மெக்ராத் (Glenn Mcgrath)
"பிஜியான்" என்று சக வீரர்களால் அழைக்கப்பட்ட மெக்ராத், கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். தனது கரீயரில் மொத்தம் 563 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவரது சிறந்த ஸ்பெல் 1997-இல் இங்கிலாந்துக்கு எதிராகப் பதிவு செய்த 8/38. 2012-ஆம் ஆண்டு ஐ.சி.சி "ஹால் ஆப் பேமில்" இடம் பெற்றார். 1998-ஆம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர்.
எழுத்து
தேப்ஜுயோதி பக்தா
மொழியாக்கம்
அஜய்