ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்கு திரும்ப உள்ளனர். அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட்டில் வெல்ல முடியாத அணியாக இருந்தது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசையிலும் முதலிடத்தில் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஆஸ்திரேலிய அணியின் இளம் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் ஆகிய இருவரும்தான். ஆனால் இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியா அணிக்கு கடந்த ஒரு வருடமாக விளையாட முடியாமல் இருக்கின்றனர். அதற்கு காரணம் அவர்கள் செய்த தவறுதான். அவ்வாறு தவறு செய்ததற்கு கிரிக்கெட் வாரியம் அவர்களை ஒரு வருடம் விளையாட தடை செய்தது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக தென்னாப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அந்த டெஸ்ட் தொடரில் வீரர் ஒருவர் பந்தை சேதப்படுத்தினார். அதை கவனித்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளசிஸ் நடுவரிடம் முறையிட்டார். இந்த விவகாரத்தை கிரிக்கெட் வாரியம் விசாரணை செய்தது. இந்த விசாரணையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னரின் ஒப்புதலுடன் தான் இந்த தவறு நடந்துள்ளது என்பது தெரியவந்தது. இந்த விசாரணைக்கு பிறகு கிரிக்கெட் வாரியம் அந்த வீரருக்கு 9 மாதமும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருடமும் விளையாட தடை விதித்தது.
ஸ்டீவ் ஸ்மித் வளர்ந்துவரும் திறமையான வீரர்களில் ஒருவர். 2011 மற்றும் 2015 ஆகிய இரு உலக கோப்பை போட்டிகளில் மொத்தமாக 10 ஆட்டங்களில் ஆடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 455 ரன்கள் குவித்துள்ளார். உலக கோப்பை போட்டிகளில் இவரின் பேட்டிங் சராசரி 56.88 ஆகும். இவர் உலக கோப்பை போட்டிகளில் 1 சதமும் 4 அரை சதமும் அடித்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அந்த போட்டியில் இந்தியாவிற்கு எதிராக ஸ்டீவன் ஸ்மித் சதம் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த தொடக்கத்தை கொடுத்து வந்தவர். இவர்கள் இருவரும் அணியில் இல்லாததால் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட இந்திய அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே ஆஸ்திரேலிய அணி சரியான கேப்டனும் மற்றும் சரியான தொடக்க ஆட்டக்காரர்களும் இல்லாமல் தடுமாறி வருகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடருக்கு அனைத்து நாடுகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னருக்கு கிரிக்கெட் வாரியம் விதித்த தடை காலம் தற்போது முடிந்து விட்டது. இவர்கள் இருவரும் விரைவில் அணிக்கு திரும்ப உள்ளனர். உலகக்கோப்பை நெருங்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு இவர்கள் இருவரும் திரும்பி வருவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.