தோனியின் ஆட்டத்தின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது - சஞ்சய் பங்கர்

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

தொடர்ந்து வெற்றியை ருசித்து வந்த இந்திய அணி, ஞாயிறு அன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. தோனியின் பேட்டிங் குறித்தும் சுழற்பந்து வீச்சாளர்களின் மோசமான செயல்பாடு குறித்தும் பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்த்னர்.

இந்நிலையில் இன்று வங்கதேச அணியை சந்திக்க உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுக்கு இந்தியா தகுதி பெற்றுவிடும்.

இதற்கிடையில் போட்டிக்கு முன்பு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளித்தார். அதுகுறித்து சுருக்கமாக பார்ப்போம்.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி:

இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய மைதானத்தில் தான் வங்கதேசத்தை எதிர்த்து விளையாட உள்ளோம். பிட்ச்சின் தன்மை மற்றும் அளவுகள் குறித்து நன்றாக அறிந்து வைத்துள்ளோம். மேலும், இன்றைய போட்டியில் பந்துவீச்சை எப்படி மேம்படுத்தலாம் என்பதிலும் கவனம் செலுத்தி இருக்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஏழு ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்துவிட்டோம். அங்கு தான் எங்கள் வெற்றி தவறியது. இன்று அதை சரி செய்ய முயற்சிப்போம். கடைசி போட்டியில் எந்த இடத்தில் தவறு நடந்தது என்று ஆராய்ந்து அதை சரி செய்வோம்.

ரிஷப் பண்டின் பங்கு:

காயம் காரணமாக ஷிகர் தவான் அணியை விட்டு விலகியதால், இடது-வலது பேட்டிங் கம்பினேஷன் இல்லாததை உணர்ந்த அணி நிர்வாகம், ரிஷப் பண்டை களம் இறக்கியது. மிடில் ஓவர்களில் இங்கிலாந்து பவுலர்களின் திட்டத்தை தோற்கடிக்கவே இவரை பயன்படுத்தினோம். அதனால் தான், அடில் ரஷீத் 10 ஓவரை முழுமையாக வீசவில்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் இறுதியில் தோனி – ஜாதவின் மந்தமான ஆட்டம்:

அவர்கள் இருவரும் மந்தமாக விளையாடியதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால், கடைசி கட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் அளவை அறிந்து சிறப்பாக பந்துவீசினார்கள். இதனால் எங்கள் பேட்ஸ்மேனால் நினைத்த இடத்திற்கு பந்தை அடிக்க முடியவில்லை. ஸ்லோ பவுன்சர்கள், ஆஃப் கட்டர்கள் போன்ற பந்துகளை மட்டுமே இங்கிலாந்து பவுலர்கள் வீசினர். அதுவும் கடைசி ஐந்து ஓவர்களில் அடிக்க வேண்டிய ரன்னுக்கும் பந்துக்கும் இடையேயான வித்தியாசம் அதிகமாக இருந்தது. முன் கூட்டியே பெரிய ஷாட்களை அடித்து ஆடியிருந்தால், இப்போதும் இருக்கும் ஸ்கோரை விட குறைவாகவே எடுத்திருப்போம். இப்போது கூடுதல் ரன்னை சேர்த்ததால் நெட் ரன் ரேட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டோம்.

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்
இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்

இந்திய ஸ்பின்னர்களின் மோசமான பந்துவீச்சு:

எல்லா பவுலர்களுக்கும் இது நடப்பது தான். அவர்களின் மோசமான நாட்களில் இதுவும் ஒன்று. ஆனால் இந்தப் போட்டியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் எங்களுக்கு இவர்கள் வெற்றியை தேடித் தந்துள்ளார்கள். அதனால் இந்த சமயத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அடுத்த சில போட்டிகளில் இவர்களின் பங்கு முக்கியமானது.

“ஃப்னிஷர்” தோனி:

புள்ளிவிபரத்தை எடுத்து பார்த்தால், ஏழு போட்டிகள் விளையாடினால், அதில் ஐந்து போட்டிகளில் தோனி பினிஷ் செய்திருப்பார். தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் முக்கியமான கட்டத்தில் ரோகித் சர்மாவோடு பாட்னர்ஷிப்பில் ஈடுபட்டார். அதன் பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், பிட்ச்சின் தன்மை வித்தியாசமாக இருந்தாலும் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி 56 ரன் அடித்தார். இங்கிலாந்திற்கு எதிராகவும் நன்றாகவே பேட்டிங் செய்தார். தோனியின் பேட்டிங் குறித்து அனைவரும் கேள்வி கேட்பது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. அவரது விளையாட்டின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம்.

கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் குறித்து:

எல்லாவற்றையும் நாங்கள் யோசித்து வைத்திருக்கிறோம். தேவைப்பட்டால், ஹர்திக் பாண்டியாவோடு சேர்த்து மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவோம். இந்தப் போட்டியில் ஜடேஜாவை இறக்கலாம என யோசித்து கொண்டிருக்கிறோம். புவனேஷ்வர் குமாரும் தயாராக இருக்கிறார்.

Quick Links

App download animated image Get the free App now