எந்த அணியையும் எங்களால் வெல்ல முடியும் – ஆஃப்கன் ஆல்-ரவுண்டர் நபி!

ஆஃப்கன் ஆல்-ரவுண்டர் முஹமது நபி
ஆஃப்கன் ஆல்-ரவுண்டர் முஹமது நபி

“எங்கள் அணியில் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங்கை மட்டும் சற்று மேம்படுத்தி விட்டால் எங்களால் எந்தவொரு டெஸ்ட் அணியையும் வெல்ல முடியும்” என ஆஃப்கானிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முஹமது நபி கூறியுள்ளார்.

நபியின் இந்த கருத்து ஏதோ சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறேதே என நமக்கு தோன்றலாம். ஆனால் அவர் கூறிய தருணத்தை நாம் சற்று கவனித்து பார்க்க வேண்டும். ஒரு நாளுக்கு முன்பு தான், டேராடூனில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சர்வதேச அரங்கில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது ஆஃப்கானிஸ்தான். “டெஸ்ட் போட்டிக்கென்று தனிச் சிறப்பு உள்ளது. நாங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தயார் என இந்த வெற்றியின் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளோம்” என்கிறார் நபி.

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியை, இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா மற்றும் இஷான்யுல்லா ஜனத் இணை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவருமே அரை சதம் கடந்து அசத்தினர். அதிலும், ரஹ்மத் ஷா இரு இன்னிங்ஸிலும் அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும், ஆஃப்கானிஸ்தான் அணியின் அனைத்து வெற்றிகளிலும் ஒரு பகுதியாக் இருக்கும் ரஷீத் கான், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் வீழ்த்தி, தான் டெஸ்ட் போட்டியிலும் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துள்ளார்.

ரஹ்மத் ஷா
ரஹ்மத் ஷா

சென்ற ஆண்டு இந்தியவிற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி, ஐந்து நாள் ஆட்டம் என்பதை மறந்து இரண்டு நாட்களிலேயே தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், தற்போது தாங்கள் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது ஆஃப்கானிஸ்தான் அணி.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே இரண்டு டெஸ்ட் போட்டிகளிலேயே தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து விட்டன. இந்திய அணி தனது முதல் வெற்றியை பெற 25 டெஸ்ட் போட்டிகளை எடுத்துக்கொண்டது. முஹமது நபி ஏன் இப்படி கூறுகிறார் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். “ஒட்டுமொத்த ஆஃப்கானிஸ்தானிற்கும் இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். முக்கியமாக, ஒன்றுமில்லாமல் இருந்த ஆஃப்கனில் டெஸ்ட் கிரிக்கெட்டை கொண்டு வந்த நபர்களுக்கு இது ஒரு முக்கியமான நாள். இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளோம். அதற்குள்ளாகவே முதல் வெற்றியை பெற்று விட்டோம்” என சந்தோஷமாக கூறுகிறார் நபி.

மேலும் அவர் கூறுகையில், “நீங்கள் வெற்றி பெற்றால் தான், எங்களுடன் விளையாட வாருங்கள் என மற்ற அணிகள் அழைக்கும். யாரும் பலவீனமான அணியோடு விளையாட விரும்ப மாட்டார்கள். ஆஃப்கானிஸ்தான் ஒரு பலவீனமான அணி என அவர்கள் நினைக்கலாம். ஆனால், நாங்கள் எந்தளவிற்கு எதிர்த்து போராடுவோம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை”.

ரஷீத் கான்
ரஷீத் கான்

“எங்களிடம் இருக்கும் பந்துவீச்சாளர்கள் பற்றி எந்த கவலையும் இல்லை. அனைவருமே உலகத்தரம் வாய்ந்தவர்கள். அணியின் பேட்டிங்கில் மட்டும் சற்று கூடுதலாக கவனம் செலுத்தி நல்ல ஸ்கோரை அடித்தால், எந்தவொரு அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என நம்பிக்கையோடு கூறுகிறார் நபி.

சமீப வருடங்களாக சர்வதேச அரங்கில் பல வெற்றிகளை பெற்று வரும் ஆஃப்கானிஸ்தான் அணி, விரைவில் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள உலக கோப்பை போட்டியிலும் தனது முத்திரையை பதிக்க ஆவலோடு உள்ளது.

Edited by Fambeat Tamil