மேற்கிந்திய தீவுகள் அணியை வழிநடத்தவுள்ளார் கிரெய்க் பிராத்வைட், கீமோ பால் அணியில் சேர்ப்பு !

Brathwaite
Brathwaite

மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஐசிசி தடை விதித்ததன் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியின் துணை கேப்டனான கிரெய்க் பிராத்வைட் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அணியை வழிநடத்த உள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றது. இவற்றில் இரண்டு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி செயின்ட் லூசியா நகரில் வரும் பிப். 9 ஆம் நாள் நடைபெற உள்ளது.

இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 187 ரன்களுக்கு சுருண்டது, ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி அரைசதம் கடந்தனர். பின்பு பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 306 ரன்கள் சேர்த்தது, 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 132 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. சொற்ப இலக்கான 14 ரன்களை கொண்டு விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தாமதமாக பந்து வீசியதன் காரணமாக கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஐசிசி மூன்றாவது போட்டியில் பங்கேற்க தடைவிதித்தது. அதுமட்டுமின்றி, போட்டி சம்பளத்திலிருந்து 40% அபராதமாக விதிக்கப்பட்டது, பிற மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு தலா 20% அபராதமாக விதிக்கப்பட்டது. ஏற்கனவே இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி தாமதமாக பந்து வீசியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்றாவது போட்டியில் பங்கேற்கவிருக்கும் 14 பேர் கொண்ட குழுவை அறிவித்தது, ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக கீமோ பால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிராத்வைட் ஐந்தாவது முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை கேப்டனாக வழிநடத்த உள்ளார், இதன் முன்பு நடைபெற்ற நான்கு போட்டிகளும் வெளிநாட்டில் நடைபெற்றவை ஆகும். இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளில் மேற்கிந்திய தீவுகள் அணியை வழி நடத்தியுள்ளார் கிரெய்க் பிராத்வைட்.

இதற்கு முன்பு, கிரெய்க் பிராத்வைட் வங்காளதேசத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளும், இந்தியாவில் ஒரு டெஸ்ட் மற்றும் நியூசிலாந்தில் ஒரு டெஸ்ட் என நான்கு டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். பிராத்வைட் கேப்டனாக செயல்பட்ட அனைத்து போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவிருக்கும் 14 பேர் கொண்ட மேற்கு இந்திய தீவுகள் அணியின் விவரம்:

கி பிராத்வைட் (கேப்டன்), டேரன் பிராவோ, ப்ரூக்ஸ், ஜான் காம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், ஷேன் டவ்ரிச்,ஷெனன் கேப்ரியல், சிம்ரோன் ஹெட்மையர், சாய் ஹோப், அல்செரி ஜோசப், கீமர் ரோச், ஓஷனே தாமஸ், ஜோம்மெள் வாரிகேன்

Edited by Fambeat Tamil