மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்-ரவுண்டர் கைரன் பொல்லார்ட் உலகக் கோப்பை அணியில் சேர்க்கும் முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிரடி ஆட்டக்காரர் பொல்லார்ட் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட முதன்மை அணியில் இடம்பெறவில்லை. இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஆன்ரிவ் ரஸல் மற்றும் கரோலஸ் பிராத்வெய்ட் ஆகிய ஆல்-ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளனர். ரஸல் மற்றும் பிராத்வெய்ட் தங்களது சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பையில் வெளிப்படுத்துவார்கள். இவர்கள் இருவரிடையே ஒப்பிடும் போது பொல்லார்ட் மிகவும் அனுபவ வாய்ந்த வீரராக திகழ்கிறார்.
பொல்லார்ட் கடைசியாக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வருடம் 2016 ஆகும். இவர் மொத்தமாக 101 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 25.76 சராசரியுடன் 2289 ரன்களை குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட 92.89 ஆகவும், அதிகபட்சமாக ஒரு போட்டியில் 119 ரன்களையும் குவித்துள்ளார். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான இவர் 39.12 சராசரி மற்றும் 5.74 எகானமி ரேட்டுடன் 50 விக்கெட்டுகளை சர்வதேச ஓடிஐ கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்த 2019 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது ஆட்டத்திறனை நிருபித்துள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது ஆட்டத்திறனை கண்டு மேற்கிந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வாரிய தேர்வுக்குழு தங்களது முடிவை மாற்றி கைரன் பொல்லார்டை உலகக் கோப்பை அணியில் சேர்க்கும் முடிவில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
"கார்டியன் மீடியா ஸ்போர்ட்ஸ்" என்ற பத்திரிகையில் வெளிவந்த செய்திப்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரிக்கெட் வாரியம் கைரன் பொல்லார்டின் அனுபவத்தினால் அவரை உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. அவரது அனுபவம் உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். அத்துடன் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை என தெரிவித்துள்ளது. இந்த முடிவை தேர்வுக்குழு இவ்வார இறுதிக்குள் உறுதி செய்து தனது அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடும் என தெரிவித்துள்ளது. இந்த முடிவின் மூலம் உலகக்கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் கூடுதல் வலிமையாக திகழும்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதியின்றி மே 23 வரை உலகக் கோப்பை அணிகள் தங்களது அணி மாற்றத்தை செய்துக் கொள்ளலாம். மே 30ம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலபரிட்சை நடத்த இருக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணி மே 31ம் தேதி தனது முதல் தகுதிச் சுற்றில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.
மேற்கிந்தியத் தீவுகளின் முதன்மை உலகக் கோப்பை அணி:
கிறிஸ் கெய்ல், ஈவின் லிவிஸ், ஷை ஹோப், ஜேஸன் ஹோல்டர் (கேப்டன்), டேரன் பிராவோ, ஆன்ரிவ் ரஸல், கரோலஸ் பிராத்வெய்ட், நிக்கோலஸ் பூரான், ஒஸானே தாமஸ், ஃபேபியன் ஆலன், ஷீம்ரன் ஹட்மைர், ஷெல்டன் கட்ரில்லா, ஷேனான் கேப்ரியல், கேமர் ரோஜ், ஆஸ்லி நர்ஸ்.