2019 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியது. இதன் பின்னர், வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது, இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியினரை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான இந்திய தேர்வு குழு வாரியம் ஒருவாரத்திற்கு முன்னர் அறிவித்தது. அடுத்த மாதம் மூன்றாம் தேதி முதல் தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இரு டெஸ்ட் போட்டிகள், தலா 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரான ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியை தவிர்த்து மற்ற இரு வடிவிலான போட்டிகளிலும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஏ அணியில் இடம் பெற்று தொடர்ந்து தங்களது திறனை வெளிப்படுத்தி வரும் வீரர்களான மணிஷ் பாண்டே, தீபக் சாகர், ராகுல் சாகர், நவ்தீப் சைனி, கலீல் அஹமது, ஸ்ரேயாஸ் அய்யர் போன்றோரும் இடம்பெற்றுள்ளனர். உலகக்கோப்பை தொடரின் அரைஇறுதி போட்டியில் அமர்க்களப்படுத்திய ரவீந்திர ஜடேஜா அனைத்து மூன்று வடிவிலான அணிகளிலும் இடம் பெற்றுள்ளார். அணியின் பிரதான விக்கெட் கீப்பரான மகேந்திரசிங் தோனி இந்திய ராணுவத்தில் இரண்டு மாதங்கள் பயிற்சியை மேற்கொள்ளவிருப்பதால், இந்த தொடரில் அவர் இடம்பெறவில்லை. இந்திய அணி அறிவிக்கப்படுவதற்கு முன்னர், விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில், தொடரின் அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளிலும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 3 வடிவிலான போட்டிகளில் உள்ளடக்கிய தொடர்களில், இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். எனவே, இம்முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் 5 போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி படைக்கவுள்ள மூன்று முக்கியமான சாதனைகள் பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
1.டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்கள்:
சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் ஒன் அரியணையில் இருக்கும் விராட் கோலி, இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 15 இன்னிங்சில் களம் இறங்கியுள்ளார். அவற்றில் 45.73 என்ற பேட்டிங் சராசரி 686 ரன்கள் குவித்துள்ளார். ஒரு இரட்டை சதம் என இரு சதங்களும் மூன்று அரைச்சதங்களையும் இவர் குவித்துள்ளார். எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை கடக்க இன்னும் 314 ரன்கள் தேவைப்படுகிறது. இரு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 314 ரன்கள் இவர் கடந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த 11வது இந்திய பேட்ஸ்மேன்கள் பெருமையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2000 ரன்கள்:
டெஸ்ட் போட்டிகளைப் போலவே ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கி வரும் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 33 இன்னிசை களமிறங்கியுள்ள விராட் கோலி 70.81 என்ற பேட்டிங் சராசரியுடன் 1912 ரன்கள் குவித்துள்ளார். அவற்றில் ஏழு சதங்களும் 10 அரை சதங்களும் அடக்கமாகும். இந்த குறிப்பிட்ட அணிக்கு எதிராக 2000 ரன்களை கடக்க இன்னும் 88 ரன்கள் விராட் கோலிக்கு தேவைப்படுகிறது. எனவே, இந்த சாதனையையும் இவர் படைப்பதற்கான போதிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
#3.டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்:
இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தலைமையில் களம் கண்டுள்ள இந்திய அணி, 6 போட்டிகளில் நான்கு வெற்றிகளை குவித்துள்ளது. மீதமுள்ள இரு டெஸ்ட் போட்டிகளில் டிரா முறையில் ஆட்டம் முடிந்துள்ளது. எனவே, இன்னும் இரு வெற்றிகளை பெற்றால் விராட் கோலி இந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய கேப்டன் எனும் சாதனையை படைக்கலாம். தற்போதைய சாதனைப்படி, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தாம் வழிநடத்திய 8 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.