உலகக் கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது. இந்திய அணி கடைசியாக உலக கோப்பையை 2011ஆம் ஆண்டு கைப்பற்றியது. அந்த உலகக் கோப்பையை நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் தலைமையில் இந்தியா கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன்பின்பு 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பையில் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அற்புதமாக விளையாடியது.
அதுவும் குறிப்பாக லீக் போட்டிகளில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் நேரடியாக அரையிறுதிக்கு சென்றது. சிறப்பாக சென்றுகொண்டிருந்த அந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா. ஆனால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் இந்திய அணியும் நல்ல பார்மில் உள்ளது. நம்பர்-4 இடம் தற்போது ராயுடுவால் நிரப்பப்பட்டுள்ளது. சிறப்பான இந்திய அணியில் நீண்ட நாட்களாக நம்பர்-4 இடத்தில் யாரை விளையாட வைப்பது என்று குழப்பமாகவே இருந்தது.
இந்திய அணி அந்த நம்பர்-4 இடத்தில் பல வீரர்களை விளையாட வைத்து முயற்சித்தது. ஆனால் அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. அதன் பின்பு கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அம்பத்தி ராயுடுவிர்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அம்பத்தி ராயுடு, தற்போது அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் ஜோடியில் எந்த பிரச்சனையும் இல்லை. அனைத்து போட்டிகளிலுமே தவான் மற்றும் ரோஹித் சர்மா சராசரியான தொடக்கத்தை கொடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் இடத்திற்கு மாற்று வீரர்கள் தேவை இல்லை. நம்பர்-3 இடத்தில் எப்போதும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தும், நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். விராட் கோலி தலைமையில் உள்நாட்டு தொடரிலும் வெளிநாட்டு தொடரிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் நிரந்தர விக்கெட் கீப்பராக தோனி இருக்கிறார். அவரது இடத்திற்கு மாற்று வீரர்கள் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நம்பர்-5 இடத்தில் யாரை இறக்குவது என்பதுதான் தற்போது பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து தேர்வு குழு தலைவர் பிரசாத் கூறியது என்னவென்றால், "இந்த மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கர் மற்றும் ரகானே உள்ளனர்.
ரிஷப் பண்ட் மிக சிறப்பான விளையாட்டை இந்திய அணிக்கு கொடுத்து வருகிறார். அதே சமயத்தில் ரகானேவும் நல்ல பார்மில் உள்ளார். அதுமட்டுமின்றி விஜய் சங்கரும் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவர்கள் மூன்று பேரில் யாரை களமிறக்குவது என்பது சற்று தலை வலியாக தான் இருக்கிறது". இவ்வாறு அவர் கூறினார். இதுவரை விராட் கோலி தலைமையில் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.