அதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான இரண்டு அணிகள் என்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குறைந்த பட்ச ஐபிஎல் ஸ்கோர் 79 ஆகும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரே ஒருமுறை மட்டும் தான் 100 – க்கும் குறைவான ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அந்த போட்டியை பற்றி இங்கு காண்போம்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 49 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினர். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசிய டுவைன் ஸ்மித், 22 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்பு வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் ரோகித் சர்மா மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசிய ஹர்பஜன் சிங், 11 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் வெறும் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு வந்த சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் பத்திரிநாத் ஆகிய இருவருமே டக் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் தோனியும் வெறும் 10 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 40 ரன்களுக்குள் சென்னை அணி முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது. இறுதியில் வந்த ஜடேஜா மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 20 ரன்கள் அடித்தார். பின்பு அவரும் ஓஜாவின் சுழலில் அவுட்டாகி வெளியேறினார். 15 ஓவர்களுக்குள் சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 79 ரன்களை மட்டுமே அடித்தது.
இறுதியில் சென்னை அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்சல் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், லசித் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்சல் ஜான்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.