பாகிஸ்தான் அணியானது கடந்த சில ஆண்டுகளாகவே மிகவும் சொதப்பி வருகிறது. கடைசியாக 2017 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ரோபியை வென்றது தான். அதன் பின் தற்போது நடந்து முடிந்த உலககோப்பை வரை அந்த அணி பெரிதாக சோபிக்கவில்லை. இந்த உலககோப்பை தொடரில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறாததால் அனைத்து ரசிகர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ரோபியை வென்ற ஒரே காரணத்தினால் மிக்கி ஆர்தரை அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக அந்நாட்டு நிர்வாகம் நியமித்திருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த அணியின் மோசமான பல தோல்விகள் மற்றும் இனி வரவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த அணியின் பயிற்சியாளரை மாற்ற அந்நாட்டு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி உலககோப்பை தொடரில் சொதப்பினாலும் டி20 போட்டிகளில் தரவரிசை பட்டியலில் முதலிடம் மற்றும் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்றது என லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பானதாவே விளங்கி வந்தது. கடந்த ஓராண்டை பொறுத்தவரையில் அந்த அணிக்கு பலத்த பின்னடைவே ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு மண்ணிலேயே நியூஸிலாந்து அணியிடம் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் வாஷ் அவுட் என படுமோசமாகவே விளையாடிவந்தது. இருந்தாலும் உலகக்கோப்பை தொடரை கைப்பற்றி விடும் என்ற நம்பிக்கையுடன் அந்நாட்டு ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அதுவும் இப்போது அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதன் விளைவாக அணியின் கேப்டனான சர்ப்ராஸ் அகமதை கேப்டன் பதிவியிலிருந்து நீக்குவதற்கும் அந்நாட்டு நிர்வாகம் முடிவெடுத்து வருகிறது. அதே வேளையில் உலககோப்பை தொடரில் வெளியேறிய பல அணிகளும் தங்களது அணிகளின் பயிற்சியாளர்களை மாற்றி வருவதால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல.
சமீபத்தில் கூட இந்திய அணியின் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டனர். அந்தவகையில் தற்போது பாகிஸ்தான் அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் என சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் சிலரின் பெயர்கள் அடிபட்டன. அதன் படி அந்த வரிசையில் இடம் பெற்றவர்களாக கருத்தப்பட்டவர்கள் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் அக் , இஸ்லாமாபாத் அணியின் பயிச்சியாளராக விளங்கும் டீன் ஜோன்ஸ் மற்றும் முன்னாள் நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளரான மைக் ஹேசன் .
அதன் பின் மைக் ஹேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என பதிவிட்டிருந்தார். இதன் மூலம் அவர் இந்த பட்டியலில் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.
எனவே அந்த பட்டியலில் உள்ள மற்ற பயிச்சியாளர்களை பார்க்கும் போது இருவரும் அனுபவம்மிக்கவர்களே. ஒருவர் அந்த அணியின் முன்னாள் சிறந்த கேப்டன் , மற்றோருவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் சீசனில் கோப்பையை வென்ற இஸ்லாமாபாத் அணியின் பயிற்சியாளர். எனவே இருவரும் சமபலத்துடன் விளங்குகின்றனர். மிஸ்பா உல் அக்-யை பொறுத்தவரையில் இவருக்கு பயிற்சியாளராக முன்னனுபவம் இல்லை, ஆனால் டீன் ஜோன்ஸ் ஆப்கானிஸ்தான் அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ளார். அனுபவத்தின் படி பார்க்கும் போது டீன் ஜோன்ஸ்-க்கே அதிக வாய்ப்புள்ளது.
இருந்தாலும் மிஸ்பா உல் அக் தான் ஓய்வு பெற்றதலிருந்து அந்நாட்டு நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினராக விளங்கி வருவதால் தேர்வுக்குழு இவரை தேர்வு செய்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது பாகிஸ்தான் அணி நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாகவே இருக்கும்.