மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி அடுத்தாக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், சைனாமேன் குல்தீப் யாதவ் மற்றும் இடதுகை ஸ்பின்னர் ரவீந்திர ஜடேஜா ஆகிய 3 சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இடம்பெற்றுள்ளனர். இம்மூவரில் யார் யாரை ஆடும் XIல் இடம்பெறச் செய்வது என்ற பெரும் தலைவலி இந்திய அணி நிர்வாகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
தனது பௌலிங்கை சிறப்பாக மேம்படுத்தியுள்ள இளம் ரீஸ்ட்-ஸ்பின்னர் குல்தீப் யாதவ் தனக்கு அளிக்கப்பட்ட குறுகிய வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்டுள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக தற்போது இளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிரிக்கெட்டில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வருடத்தின் தொடக்கத்தில் சிட்னியில் நடந்த மழையால் பாதித்த டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவ் 5-விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு பின்னர் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாட்டு மண்ணில் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை விட குல்தீப் யாதவிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்பது போல் தெரிவித்திருந்தார்.
"ஏற்கனவே! இவர் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். எனவே குல்தீப் யாதவ்-தான் வெளிநாட்டு மண்ணில் இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை ஸ்பின்னர். இந்திய அணி ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் மட்டும் களமிறங்குமேயானால் அந்த ஒரு சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தான்," என கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இணையத்தில் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை பார்க்கும் போது இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் இல்லை எனத் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்திய அணி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் நிலைத்து நிற்க மூலக்காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் அதிகப்படியான சுழற்பந்து வீச்சாளர்கள் உருவெடுத்துள்ளதால் அனைத்து அணி நிர்வாகங்களுக்கும் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
ஏற்றம் மற்றும் இறக்கம்
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்து பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் தென்னாப்பிரிக்கா மண்ணில் அஸ்வின் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 7 விக்கெட்டுகளை மற்றுமே கைப்பற்றினார். அதன்பின் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் எட்ஜ்பாஷ்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் மட்டும் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். காயம் காரணமாக அவரது சிறப்பான ஆட்டத்திறன் அதன்பின் வெளிப்படவில்லை. இந்தியாவிற்கு மோசமாக அமைந்த இந்த டெஸ்ட் தொடரில் 5 இன்னிங்ஸில் பங்கேற்ற அஸ்வின் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஒரு சிறந்த ஸ்பின் மாஷ்டர் பலரால் அதிகம் நகைக்கப்பட்டார். இருப்பினும் அதன்பின் காயத்திலிருந்து மீண்ட அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி சேம்பியன்ஷீப்பில் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக பங்கேற்று பேட்டிங் மற்றும் பௌலிங்கில் அசத்தினார். எனவே இதனையும் இந்திய கிரிக்கெட் அணி கவனிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இதற்கு முன்னர் நடந்த மேற்கிந்தியத் டெஸ்ட் தொடரில் அஸ்வின் சதம் விளாசி ஒரு போட்டியில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளார்.
ஜடேஜாவின் உறுதியான நிலைத்தன்மை
குல்தீப் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வர முக்கிய காரணமாக அற்புதமான கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். கிட்டத்தட்ட அணியிலிருந்து புறந்தள்ளப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா, தனது முழு ஆட்டத்திறனையும் கிடைத்த குறுகிய வாய்ப்பில் பயன்படுத்தி கொண்டு தன்னை நிரூபித்துள்ளார் ஜடேஜா. இவர் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்து வருகிறார். அத்துடன் ஜடேஜாவின் அற்புதமான ஃபீல்டிங்கிற்கு ஈடுஇணையே யாரும் இல்லை. அதிகபடியான திறமைகளை தன்னிடத்தில் கொண்ட ஜடேஜா இந்திய அணியின் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார்.
மேலும் இங்கிலாந்திற்கு எதிரான தொடரின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் கடைநிலை பேட்ஸ்மேன்களின் முக்கியத்துவம் குறித்து உணர்ந்திருப்பார்கள். இந்தியாவிற்கு சரியான முடிவாக அமையாத 2019 உலகக்கோப்பை தொடரில் ஜடேஜாவின் பேட்டிங் கடைநிலையில் மிகவும் அற்புதமாக இருந்தது. எனவே ஜடேஜா இந்திய அணியின் ஆடும் XIல் கண்டிப்பாக இடம்பெறுவார். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை விட குல்தீப் யாதவிற்கு அதிக முக்கியத்துவம் டெஸ்ட் அணியில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் அவரது சிறப்பான சைனாமென் பௌலிங். யாரும் எதிர்பாராத விதமாக மூன்று சுழற்பந்து வீச்சாளர்களையும் ஆடும் XIல் இடம்பெறச் செய்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூட அதிக வாய்ப்புள்ளது. சமீப காலமாக விராட் கோலியின் சிறப்பான டெஸ்ட் கேப்டன்ஷீப்பினால் அவர் எடுக்கும் முடிவு சரியானதாக அமைந்து வருகிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஆடும் XIஐ காண அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.