கடந்த சில நாட்களாக இந்திய அணியில் ஸ்பின்னர் என்றாலே குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரின் பெயர்கள் தான் தேர்வு குழுவினர்களுக்கு முதலில் ஞாபகம் வரும். அதேபோல் அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல முறை வெற்றிகளை பெற்றுதந்தனர். குல்தீப் யாதவ் தனது மாயாஜால சுழல்களால் இந்திய அணியில் நீங்காத இடம் பெற்றுள்ளார். ஆனால் சஹாலின் இடம் சில மாதங்களாக கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் குல்தீபிடம் இருக்கும் பௌலிங் வேறுபாடுகள் இவரிடம் பெரிதாக இருப்பதில்லை என்பதுதான்.
உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கும் நிலையில் இந்திய அணி ஒரு சிறந்த ஸ்பின் ஜோடிக்காக முயற்சித்து வருகிறது. உலக கோப்பையில் குல்தீபுடன் ஜோடி யார் ? என்ற கேள்விக்கு இன்னும் இந்திய தேர்வு குழுவினருக்கு பதில் இல்லை. இந்த முயற்சியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய அணியில் விளையாட ஆசிய கோப்பையில் இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதும் அனைவரும் அறிவோம். முன்னதாக, ஜடேஜா அவரது பேட்டிங்கில் சொதப்பி வந்தார். அவர் தனது விக்கெட்டின் முக்கியத்துவம் அறியாமல் விளையாடி வந்தார். அவரது விக்கெட்டை எதிர் அணியினர் எளிதாக வீழ்த்தி வந்தனர். இதனால் அவரது ஆல்-ரவுண்டர் செயல்திறன் கேள்விக்குறியாக இருந்தது. ஆசிய கோப்பையில் தனது பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.
இவர், தான் விளையாடும் டெஸ்ட் போட்டிகளை போல தனது விக்கெட்டிற்கு அதிக மதிப்பு கொடுத்து விளையாடினால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தனக்கான இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் ஜடேஜா இந்திய அணியின் தலைசிறந்த ஃபீல்டர் ஆவார். சிறந்த ஃபீல்டர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தங்களது அணிக்கு சிறந்த முறையில் பங்களிப்பர். இதை ஆஸ்திரேலியாவுடன் நடந்த இரண்டாம் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜாவை தனது துல்லியமான த்ரோவினால் ரன்அவுட் செய்தார். இதை வைத்து ஜடேஜாவின் ஃபீல்டிங் மதிப்பையும் திறமையையும் காணலாம்.
உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்தியா தனக்கென ஓர் சீரான அணியை அமைக்கும் நிர்பந்தத்தில் இருக்கிறது. அணியின் ஆல்ரவுண்டர்களே அணிக்கான சமநிலையை அளிப்பர். சஹால் ஒரு கீழ் வரிசை பேட்ஸ்மேன் மற்றும் சுமாரான ஃபீல்டர் என்பதால் இது அவருக்கு எதிராக உள்ளது. மேலும் அவரது பந்துவீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் தாக்கினால் அவரிடம் வேறு விதமான பௌலிங் வேறுபாடுகளும் இல்லை. இதனால் இவரது ஆட்டம் கடந்த சில தொடர்களில் மிகவும் சுமாராகவே இருந்தது.
இந்திய அணி நிர்வாகம் தங்களது அணி சமநிலையாக இருக்கவே ஆஸ்திரேலியா தொடரில் ரவீந்திர ஜடேஜாவை சஹாலிற்கு பதிலாக தேர்வு செய்துள்ளனர்.
தற்போதைய நிலைமையை வைத்து பார்த்தால் உலக கோப்பை தொடரில் சஹாலிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெற்றால் அதில் எவ்வித ஆச்சிரியமும் இல்லை.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற மூன்றாம் ஒருநாள் போட்டியில் குல்தீபிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சஹாலிற்கு வாய்ப்பளித்தது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வந்தது. 23-ஆம் ஓவரை வீச சஹாலிற்கு வாய்ப்பளித்தார் கோலி. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷான் மார்ஷ் மற்றும் உஸ்மான் கவாஜாவை தான் வீசிய முதல் ஓவரிலேயே வெளியேற்றினார், சஹால். இதனால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் உருகுலைந்தது.மேலும், இவர் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஹாண்ட்ஸ்கோம், ஸ்டோனிஸ் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்களையும் ரிச்சர்ட்சன் மற்றும் ஜாம்பா போன்ற பந்துவீச்சாளர்களையும் சேர்த்து மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தி தான் அணிக்கு திரும்பியதை மிக அழுத்தமாக பதிவு செய்தார் சஹால்.
இதன் மூலம் 5/15 என்ற ரவி சாஸ்திரி சாதனையை முறியடித்ததுடன் 6/42 என்ற அஜித் அகர்கரின் சாதனையை சமன் செய்தார். மேலும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட் வீழ்த்திய பௌலர் என்ற பெருமையையும் இம்ரான் தாஹிருக்கு அடுத்தபடியாக சஹால் பெற்றார். இதன் மூலம் சஹால் இந்திய அணியில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றது.வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரருக்கே உலககோப்பையில் இடம் அளிக்கப்படும்.
எழுத்து: சச்சின் அரோரா
மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்