உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்த ஆண்டு வருகிற மே 30-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று பிற்பகலில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் நிச்சயம் இடம் பெறுவார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரிஷாப் பான்ட்’ மற்றும் ‘அம்பத்தி ராயுடு’ ஆகியோர் இடம்பெறவில்லை. மேலும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக ‘ரிஷாப் பான்ட்’க்கு பதில் இரண்டாவது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த மாற்றம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்து இருக்கிறது. ஆனால் சற்று ஆழ்ந்து நோக்கும் போதுதான் இந்திய தேர்வுக்குழுவினர் சரியான ஒரு காரணத்தோடுதான் இந்த மாற்றத்தினை உட்படுத்தியுள்ளனர் என்பது தெரியவரும்.
தினேஷ் கார்த்திக் இந்த உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க மிக முக்கிய காரணம் அவரது அனுபவம். இளம் வீரர் ‘ரிஷப் பான்ட்’ இதற்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஆடியதில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு முக்கிய ஐசிசி தொடர்களிலும் இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி இருக்கிறார். எனவே இங்கிலாந்து மண்ணில் தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் ‘தினேஷ் கார்த்திக்’ இளம் வீரர் பான்ட்டை விட விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக விளையாடக் கூடியவர். இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக விளங்கும் ‘எம்.எஸ் தோனி’க்கு காயம் அல்லது ஓய்வு தேவைப்பட்டால் அந்த இடத்துக்கு தினேஷ் கார்த்திக் மிகப் பொருத்தமான ஒரு தேர்வாக இருப்பார்.
அடுத்தடுத்த வருடங்களில் நடைபெற உள்ள முதன்மையான ஐசிசி தொடர்களான டி-20 உலகக் கோப்பை 2020 (ஆஸ்திரேலியா), டி-20 உலகக் கோப்பை 2021 (இந்தியா) மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை 2023 (இந்தியா) போன்ற முக்கிய தொடர்கள் நடைபெற உள்ள இடங்கள் ‘ரிஷாப் பான்ட்’ இப்பொழுதே சிறப்பாக ஆடிய இடங்கள் தான். எனவே வரும் காலங்களில் பான்ட் மேலும் தனது ஆட்டத்திறனை வலுப்படுத்தி, சிறந்த அனுபவம் பெற்று இந்திய அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக திகழ்வார் என உறுதியாக நம்பலாம்.
அதே நேரம் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பு செய்த ‘தினேஷ் கார்த்திக்’க்கு இந்த உலகக் கோப்பை வாய்ப்பு நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இந்த உலகக் கோப்பையில் ‘தினேஷ் கார்த்திக்’க்கு ஆடும் லெவனில் அதிக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
உலகக் கோப்பைக்கான இந்திய அணி விபரம்.
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், எம்.எஸ் தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்தர சஹால், ரவிந்திர ஜடேஜா.