2019 உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ளது. இது ஒரு சில ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் ஒரு சில ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும் செய்தியாகும். ஏனெனில், மகேந்திர சிங் தோனி இந்த உலகக் கோப்பைத் தொடரோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார். வருடத்திற்கு வருடம் தன்னை மெருகேற்றி வரும் தோனி, கிரிக்கெட் போட்டிகளில் தனி சிறப்பு வாய்ந்த வீரர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென தனது ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர், தொடர்ந்து சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதன் பின்னர், நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் தோனியிடம் எழுப்பிய கேள்விக்கு 2019 உலகக்கோப்பை தொடர் வரை தான் சர்வதேச போட்டிகளில் விளையாட போவதாக கூறினார், மகேந்திர சிங் தோனி.
அதன் பின்னர், தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்திய அணியில் குறுகிய கால போட்டிகளில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார், மகேந்திரசிங் தோனி. கடந்த 15 வருடங்களாக இந்திய அணிக்கு தோனி அளித்த பங்களிப்பு ஏராளம் ஒரு சிறந்த கிரிக்கெட் கேப்டனாக, விக்கெட் கீப்பராக, ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் பேட்ஸ்மேனாக தன்னை வெவ்வேறு வடிவங்களில் மெருகேற்றியுள்ளார். தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கூட 358 ரன்களை குவித்து தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்து வருகிறார், தோனி.

இத்தகைய சிறப்புமிக்க இவரது ஆட்டம் இந்த உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருவதால் ஒவ்வொரு தோனி ரசிகரும் சற்று கலக்கமடைந்துள்ளனர். உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தோனியின் பங்களிப்பு விலை மதிப்பற்றது என சமீபத்தில் புகழ்ந்துள்ளார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். ஐசிசியின் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து 3 உலககோப்பைகளையும் வென்று தந்த ஒரே கேப்டனான மகேந்திர சிங் தோனி, கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியை கட்டியமைத்து வந்தார். தற்போது, இந்த சூரியன் அஸ்தமனம் ஆகிறது என்றால் ஒவ்வொரு தோனி ரசிகருக்கும் ஏற்புடையதாக இல்லை.
எனவே, உலக கோப்பை தொடர் நெருங்கி வருவதை கண்டு இவரின் ரசிகர்கள் பலரும் அஞ்சுகின்றனர் இவரின் வெற்றி பயணத்தின் முடிவாக கருதப்படும். இந்த உலகக் கோப்பை தொடரில் மீண்டும் ஒருமுறை இந்தியா சாம்பியன் பட்டம் வென்று தோனியை வெற்றி கையோடு அனுப்ப வேண்டும் என இவரது ரசிகர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
