தென்னாப்பிரிக்க நட்சத்திர ஃபீல்டர் ஜான்டி ரோட்ஸ் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த செய்தி வெளியானதிலிருந்து அனைவருமே இவர்தான் அடுத்த இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் என உறுதிபட நினைத்திருந்தனர். ஜான்டி ரோட்ஸ் ஆல்-டைம் சிறந்த ஃபீல்டர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக கிரிக்கெட்டில் ஜான்டி ரோட்ஸின் ஃபீல்டிங் ஒரு பெரும் திறனாக பார்க்கப்படுகிறது. எனவே இவருக்கு இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவி எளிதில் கிடைத்துவிடும் என கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணியிருந்தனர்.
ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு பெரும் ஆச்சரியத்தை உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அளித்தது. இந்திய தேர்வுக்குழுவானது இப்பணிக்காக தற்போதைய ஃபீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் பெயரையே பரிந்துரை செய்தது. குறிப்பாக ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு இந்திய தேர்வுக்குழு நேர்காணல் நடத்துவதற்கு வெளியிட்ட 3 பெயர்களில் கூட ஜான்டி ரோட்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இந்த முடிவு அதிக சந்தேகத்துடன் குழப்பபத்தையும் ஏற்படுத்துகிறது. எம்.எஸ்.கே பிரசாந்த் இந்த தேர்வுக்குப் பிறகு இதற்கான விளக்கத்தை அளித்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளும் படியாக இல்லை.
தற்போது இந்திய முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி ஜான்டி ரோட்ஸ் இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளராக ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என சற்று விவரமாக விளக்கியுள்ளார். இந்திய அணியின் தற்போதைய ஃபீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் இந்திய அணிக்காக ஃபீல்டிங்கில் பெரும் பங்களிப்பை அளித்து வந்துள்ளார். சமீபத்திய உலகக்கோப்பை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பை ஶ்ரீதர் அளித்து வருகிறார் என எம்.எஸ்.கே பிரசாந்த் தெரிவித்திருந்தார். சவ்ரவ் கங்குலி ஆரம்பத்தில் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதன்பின் தற்போது கங்குலி ஒரு சரியான விவரத்தை நமக்கு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீதர் ஏற்கனவே இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இருந்து வருவதால் அதற்காக கூட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்திய பயிற்சியாளர்களுடன் கலந்துரையாடி ஆலோசிப்பது இந்திய வீரர்களுக்கு ஏதுவாக இருக்கும். ஶ்ரீதர் மீண்டும் இந்திய ஃபீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என கங்குலி நினைக்கிறார்.
"ஶ்ரீதர் இந்திய அணிக்காக பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். இந்திய அணியின் ஃபீல்டிங் வெகு சிறப்பாக உள்ளது. இதனை நீங்கள் உலகக்கோப்பையில் கண்டிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா ஒரு மிகப்பெரிய ஃபீல்டிங் லெஜன்டாக எதிர்காலத்தில் வலம் வர அனைத்து தகுதியும் அவருக்கு உண்டு."
"நான் தற்போது நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கிறேன். ஏனெனில் இந்திய பயிற்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் இடையிலான கருத்து பரிமாற்றம் சரியாக அமையும். அதுமட்டுமின்றி வீரர்களின் மனநிலையையும் புரிந்து பயிற்சியளிக்க இந்திய பயிற்சியாளர்களுக்கு ஏதாவாக இருக்கும். வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இதற்கு சளைத்தவர்கள் இல்லை. ஒரு கட்டத்தில் குறிப்பாக 2000ஆம் ஆண்டில் இந்திய அணியின் இளம் வீரர்களை வழிநடத்த ஒரு வெளிநாட்டு பயிற்சியாளர் தேவைப்பட்டது. தற்போது இந்திய பயிற்சியாளர்களை இந்திய அணிக்கு நியமித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் அவர்கள் தங்களது திறமையை நிறுபிக்க கடுமையாக உழைத்துள்ளனர்."