ஜூன் 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், உலக கோப்பை தொடங்க இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில் சற்று தடுமாறி வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் ஆட்டத்தை மாற்றி தீர்மானிக்கும் இந்திய வீரராக திகழ்ந்து வருகிறார், குல்தீப் யாதவ். யுஸ்வேந்திர சாஹலுடன் இணைந்து குறுகிய கால போட்டிகளில் மிடில் ஓவர் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு வருகிறார், குல்தீப். இவரது மிகச்சிறந்த பந்துவீச்சு சராசரி சர்வதேச எதிரணி வீரர்களை குறிவைத்து தாக்கி வருகின்றன. மொத்தம் இவர் விளையாடியுள்ள 70 சர்வதேச போட்டிகளில், 146 விக்கெட்களை கைப்பற்றி இந்திய அணியின் துருப்புச்சீட்டாக திகழ்ந்து வருகிறார்.
சமீப காலங்களில் நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் இந்திய அணியில் நம்பிக்கையைப் பெற்ற வீரராகவும் திகழ்ந்து வருகிறார். மேலும், இந்த காலண்டர் வருடத்தில் 11 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த வருடத்தின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சராசரியாக ஒரே போட்டியில் 2 முதல் 3 விக்கெட்களை கைப்பற்றும் திறன் பெற்றிருக்கும் குல்தீப் யாதவ் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மிடில் ஓவர்களான 7 முதல் 15 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றாமல் தடுமாறி வருகிறார். அதேபோல் ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
கடந்த ஈராண்டுகளில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து சர்வதேச நாடுகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று ஓரளவு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். துல்லியமான இவரது பந்துவீச்சும் அவ்வப்போது மாற்றங்களை கையாளும் திறனும் ஒளிந்து உள்ளதே இவரது பவுலிங் வெற்றிக்கு காரணமாகும். ஆனால், இந்த ஐபிஎல் தொடரில் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றியுள்ளார். சர்வதேச போட்டிகளில் இவரது பந்துவீச்சில் இரையான வீரர்கள் கூட சற்றும் தயங்காமல் இந்த ஐபிஎல் தொடரில் இவரது பந்துவீச்சை வெளுத்து வாங்கி வருகின்றனர்.
இவரது ஃபார்ம் இப்படியே தொடர்ந்தால் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் இவரின் 10 ஓவர்களில் என்பது ரன்களையாவது குவிக்க எதிர் அணி வீரர்கள் முற்படுவர். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்கள் நடக்க உள்ள நிலையில் பந்துவீச்சாளர்கள் சற்று கூடுதல் உத்வேகத்துடன் செயல்படுவது அணிக்கு சாதகமாக முடியும். ஆனால், இவர் சற்று தடுமாறி வரும் நிலையை கண்டால் நமக்கு கேள்வியே மிஞ்சியுள்ளது. 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வானார், குல்தீப் யாதவ். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் தான், இந்திய குறுகிய கால போட்டிகளில் ஒரு நிலையான இடத்தை பிடித்தார். இதுமட்டுமல்லாது இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இன்று இவர் அறிவிக்கப்பட்ட நிலையில் இனிமேலாவது விக்கெட்டுகளை வீழ்த்த ஆயத்தமாக வேண்டும்.