உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது நாக் அவுட் போட்டியில் தமது மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் மூலம், உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது, இந்திய அணி. இதற்கிடையே மிகுந்த ஏமாற்றமடைந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கமும் இந்திய ஆடவர் அணிக்கு தகுதியான புதிய பயிற்சியாளர்களை நியமிக்க ஆயத்தம் காட்டி வருகின்றது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐயின் நிர்வாக குழு கபில்தேவ் உள்ளிட்ட மூன்று முன்னாள் வீரர்கள் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து இந்திய அணிக்கான புதிய பயிற்சியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளது.
அடுத்த மாதம் 3ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பல போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் உள்ளிட்டவை கொண்ட நீண்ட அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. அணியின் மூத்த வீரர்களான விராத் கோலி, தோனி மற்றும் பும்ரா ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென விராட் கோலி தான் தொடர்ந்து விளையாட விரும்புவதாக செய்திகள் பரவின. தற்போதைய இந்திய அணியில் திறமையான வீரர்கள் பலர் இருப்பினும், அவர்களுக்கு இது போன்ற தொடர்களில் ஓய்வளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு சற்று வாய்ப்பளிக்க வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சில இளம் வீரர்கள் தங்களது அபார ஆட்டத்தினை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்துள்ளனர். எனவே, நாளை அறிவிக்கப்பட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம்பிடித்து சர்வதேச போட்டிகளில் அறிமுகமாக உள்ள மூன்று வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#1.மயங்க் அகர்வால்:
கர்நாடகாவை சேர்ந்த தொடக்க பேட்ஸ்மேனான மயங்க் அகர்வால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் கண்டார். தனது அறிமுக போட்டியான சிட்னி டெஸ்டில் 112 பந்துகளை சந்தித்து 77 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதுவரை இவர் விளையாடிய மூன்று டெஸ்ட் இனிங்ஸில் 195 ரன்களை குவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியமையால் அவருக்கு மாற்றாக மயங்க் அகர்வால் அணியில் இணைந்தார். இருப்பினும், ஒரு போட்டியில் கூட இவர் விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியான பங்களிப்பை அளித்ததால் இத்தகைய அதிர்ஷ்டம் மயங்க் அகர்வாலுக்கு அடித்தது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மா உடன் இணைந்து அணியின் மாற்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இவர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#2.நவ்தீப் சைனி:
டெல்லியை சேர்ந்த நவ்தீப் சைனி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதன் காரணமாக, உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் செய்யப்பட்ட பந்துவீச்சாளராக சைனி இருந்துள்ளார். கடந்த 2017/18 ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி டிராபி சீசனில் 8 போட்டிகளில் பங்கேற்று 34 விக்கெட்களை கைப்பற்றியதால் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார், நவ்தீப் சைனி. இதன் பின்னர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு போட்டியில் கூட இவர் களமிறக்கப்படவில்லை. தொடர்ந்து இந்திய ஏ அணியில் பயணித்து வரும் இவர் தமது அபாரமான பல ஆட்டங்களை அளித்துள்ளார். இதன் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்து தொடர்ந்து ஆடும் லெவனில் இடம் பெற்று வந்துள்ளார். தனது துல்லிய வேகப்பந்து வீச்சு தாக்குதலால் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், தொடர்ச்சியாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவர் இந்திய அணியில் விரைவிலேயே இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அணியில் உள்ள முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்படும் எனில் இவர் நிச்சயம் ஆடும் லெவனில் இடம் பெறுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
#3.இஷான் கிஷான்:
இந்திய அணியின் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் என்பது சற்று கவலை கூடிய வகையில் அமைந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது அரையிறுதி போட்டியில் கூட மிடில் ஆர்டர் சற்று நினைத்து நின்றிருந்தால் அந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தை நோக்கி இந்திய அணி பயணித்து இருக்கலாம். எனவே, அணி நிர்வாகம் தற்போது மிடில் ஆர்டரில் ஏற்பட்டுள்ள தவறினை சீர் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தற்போது இந்திய ஏ அணியில் விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான், இந்த மிடில் ஆர்டர் பற்றாக்குறையை போக்குவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
பல்வேறு உள்ளூர் போட்டிகளில் தகுந்த அனுபவம் பெற்றுள்ள இவர், 53 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடிள்ளார். அவற்றில் 1780 ரன்களை 37.9 என்ற பேட்டிங் சராசரியுடன் குவித்துள்ளார். மேலும், இவரது ஸ்ட்ரைக் 90.77 என்ற வகையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் ஜாம்பவானான மகேந்திர சிங் தோனி ஓய்வு அளிக்கப்படும் நிலையில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார். அவருக்கு மாற்றாகவும் மிடில் ஆர்டரில் கூடுதல் பங்களிப்பாகவும் அமைய இஷான் கிஷான் அறிமுகம் காண்பார் என எதிர்பார்க்கலாம்.