ஆகஸ்ட் 3 அன்று ஃப்ளோரிடோவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் 16 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
டாஸ் வென்று இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இந்த இலக்கை இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
ரன் விவரம்: மேற்கிந்தியத் தீவுகள் - 95/9 (20 ஓவர்கள்) (கீரன் பொல்லார்ட் 49, நிக்கலஸ் பூரான் 21; நவ்தீப் சைனி 3/17)
இந்தியா - 98/7 (17.2 ஓவர்கள்) ( ரோகித் சர்மா 26, மனிஷ் பாண்டே 19; சுனில் நரைன் 2/14)
ஆட்ட முடிவு: இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
நாம் இங்கு இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைப் புள்ளி விவரங்களைப் பற்றி காண்போம்.
அணிகளின் புள்ளி விவரங்கள்
மேற்கிந்திய தீவுகள்
1) முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்தது. இதுவே இந்தியாவிற்கு எதிராக சர்வதேச டி20யில் மேற்கிந்தியத் தீவுகளின் மிகக்குறைந்த ரன்களாகும். இதற்கு முன் 2018ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று கொல்கத்தாவில் இரு அணிகளும் மோதிய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை அடித்ததே மிகக்குறைந்த ரன்களாக இந்தியாவிற்கு எதிராக இருந்தது.
அத்துடன் 95/9 என்ற ரன்களே, முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகளின் ஒட்டுமொத்த இரண்டாவது மிகக்குறைந்த ரன்களாகும். இதற்கு முன் 2019ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று பேஸ்டெரே-வில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 13 ஓவர்களில் 71 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதே முதல் இன்னிங்சில் மேற்கிந்தியத் தீவுகளின் மிகக்குறைந்த ரன்களாக இருந்தது.
இதற்கிடையில் இந்தியாவிற்கு எதிரான 95/9 என்ற ரன் இலக்கே மேற்கிந்தியத் தீவுகளின் 6வது மிகக்குறைந்த ரன் இலக்காகும்.
இந்தியா
1) அந்நிய மண்ணில் இந்திய அணியின் 50வது சர்வதேச டி20 வெற்றியாகும். அந்நிய மண்ணில் 81 டி20 வெற்றிகளை குவித்துள்ள பாகிஸ்தானிற்குப் பிறகு 50 வெற்றிகளை குவித்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
வீரர்களின் புள்ளிவிவரங்கள்
இந்தியா
1) இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 400 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 400 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய 2வது இடதுகை பந்துவீச்சாளராகவும், 4வது இந்திய சுழற்பந்து வீச்சாளராகவும், 7வது இந்திய பௌலராகவும் ரவிந்திர ஜடேஜா வலம் வருகிறார். அத்துடன் ஒட்டுமொத்தமாக 400 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றிய 5வது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா.
2) இந்திய வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு முதல் சர்வதேச டி20 போட்டியாகும். இப்போட்டியில் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே அளித்து 1 மெய்டனுடன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் இரண்டாவது சிறந்த பௌலிங் ஆகும். இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இரு அணிகளும் மோதிய போட்டியில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அறிமுக போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இரண்டாவது வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி ஆவார். புவனேஸ்வர் குமார் தனது அறிமுக டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசி 9 ரன்களை மட்டுமே அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் அறிமுக சர்வதேச டி20யில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்திய 4வது இந்திய பௌலராகவும் உள்ளார்.
3) வலதுகை வேகப்பந்து வீச்சாளர் அஜீத் அகர்கர் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோருக்கு பின்னர் அறிமுக சர்வதேச டி20யில் மெய்டன் ஓவர் வீசிய பௌலர் நவ்தீப் சைனி.