இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆகஸ்ட் 4 அன்று லாடர்ஹீல்-ல் நடந்த இரண்டாவது டி20 போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் பாதியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்திய அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் அருமையான தொடக்க பார்டனர் ஷீப் அமைத்தே விளையாடத் தொடங்கினர். பவர்பிளே ஓவரில் 52 ரன்களை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி குவித்தது. தவானின் விக்கெட் வீழ்த்தப்பட்டதற்கு பின்னர் விராட் கோலி ரோகித் சர்மாவுடன் சிறிது நேரம் நிலைத்து விளையாடினார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய மனிஷ் பாண்டே மற்றும் ரிஷப் பண்ட் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். க்ருநல் பாண்டியா கடைசி இரு ஓவர்களில் சற்று அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி இந்திய அணியின் ரன்களை உயரத்தினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை அடித்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நிக்கலஸ் பூரான நிதான ஆட்டத்தை கையாண்டார். ரோவ்மன் பவ்ல் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் அடித்தது. அச்சமயத்தில் மழை குறுக்கிட்டது. அதன்பின் மீண்டும் ஆட்டம் தொடங்க வாய்ப்பில்லாமல் போனதால் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இந்திய அணி முன்னிலை வகித்து தொடரை கைப்பற்றியுள்ளது.
முழு ரன் விவரம்: இந்தியா - 167/5 (20 ஓவர்கள்) (ரோகித் சர்மா 67, விராட் கோலி 28; ஷெல்டன் காட்ரேல் 2/25)
மேற்கிந்திய தீவுகள் - 98/4 (15.3 ஓவர்கள்) (ரோவ்மன் பவ்ல் 54, நிக்கலஸ் பூரான் 19; க்ருநல் பாண்டியா 2/29)
முடிவு - டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
நாம் இங்கு இப்போட்டியில் நிகழ்த்தப்பட்ட சில சாதனை புள்ளிவிவரங்களைப் பற்றி காண்போம்
அணிகளின் புள்ளி விவரங்கள்
இந்தியா
1) இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. இதுவே இந்தியாவிற்கு வெளியே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணியின் மூன்றாவது அதிகபட்ச ரன்களாகும். 2016ல் ஆகஸ்ட் 4 அன்று ஃப்ளோரிடோவில் நடந்த போட்டியில் இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்ததும், 2017ல் ஜீலை 9 அன்று கிங்ஸ்டனில் இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்ததும் முதல் இரு இடங்களில் உள்ளது.
வீரர்களின் புள்ளி விவரங்கள்
மேற்கிந்திய தீவுகள்
இப்போட்டியானது சுனில் நரைனின் 50வது சர்வதேச டி20 போட்டியாகும். இதன்மூலம் 50 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள 8வது மேற்கிந்தியத் தீவுகள் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்தியா
1)இப்போட்டியின் முடிவில் விராட் கோலி தனது டி20 கிரிக்கெட் வாழ்வில் 8416 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் அதிக டி20 ரன்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையுடன், ஒட்டுமொத்தமாக அதிக டி20 ரன்களை விளாசிய உலகின் 6வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதிக டி20 ரன்களை குவித்த இரண்டாவது இந்திய வீரராக தற்போது சுரேஷ் ரெய்னா 8392 ரன்களுடன் உள்ளார்.
2) ரோகித் சர்மா மொத்தமாக 107 சர்வதேச டி20 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் இதற்கு முன் சர்வதேச டி20யில் அதிக சிக்ஸர்களை விளாசியிருந்த கிறிஸ் கெய்ல்-லின் சாதனையை முறியடித்தார். கிறிஸ் கெய்ல் தனது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்வில் 105 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
3) ரோகித் சர்மா இப்போட்டியில் 67 ரன்களை விளாசி தனது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 21வது 50+ ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக 50+ ரன்களை விளாசியவர் ரோகித் சர்மா என்ற பெருமையை பெற்றார்.
4) இப்போட்டி முடிவில் ரோகித் சர்மா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சர்வதேச டி20யில் 425 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சர்வதேச டி20யில் குவித்திருந்த 423 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சர்வதேச டி20யில் அதிக ரன்களை விளாசிய வீரராக ரோகித் சர்மா தற்போது உள்ளார்.