இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி ஆகஸ்ட் 4 அன்று ஃப்ளோரிடோவில் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 3 அன்று நடந்த முதல் டி20யில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது.
மேற்கிந்திய தீவுகள் முதல் டி20யில் 95 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அந்த அணியால் மறக்க முடியாத போட்டியாக அமைந்தது. கீரன் பொல்லார்ட் மற்றும் நிக்கோலஸ் பூரான் ஆகிய இருவர் மட்டுமே இப்போட்டியில் இரு இலக்கங்களில் ரன்களை குவித்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எவின் லிவிஸ் மற்றும் ஷீம்ரன் ஹட்மயர் ஆகியோர் முதல் டி20யில் சுழியத்தில் தங்களது விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களை ஏமாற்றினர்.
இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் முதல் டி20யில் 95 என்ற குறைவான இலக்கை அடைய 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் அறிமுக வீரர் நவ்தீப் சைனி முதல் போட்டியில் அற்புதமான பந்துவீச்சை மேற்கொண்டார். இதே ஆட்டத்தை இரண்டாவது போட்டியிலும் வெளிபடுத்த அவர் முயற்சிப்பார்.
முன்னாள் டி20 சேம்பியனான மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டாவது டி20 போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதில் வென்றால் மட்டுமே இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை இழக்காமல் மேற்கிந்தியத் தீவுகளால் இருக்க முடியும் என்ற காரணத்தால் இப்போட்டியில் விருவிருப்பிற்கு பஞ்சமிருக்காது.
ஆட்டத்தின் தகவல்கள்
நாள்: ஆகஸ்ட் 4, 2019 (ஞாயிறு)
நேரம்: இந்திய நேரப்படி இரவு 8 மணி, ஆடுகள நேரப்படி காலை 10:30
இடம்: லாடர்ஹீல், ஃப்ளோரிடா
காலநிலை
முதல் டி20 போட்டிக்குப் பின் அச்சுறுத்தும் வகையில் இடி மின்னல்கள் மைதானத்தில் தென்பட்டது. இருப்பினும் தற்போது வானம் மேகமூட்டத்துடன் தென்படுவதால் ஆட்டநேரமான 8:00 மணிக்கு மழை குறுக்கிட வாய்ப்பில்லை.
ஆடுகள தன்மை
பேட்டிங்கிற்கு சாதகமான இம்மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் பௌலர்களுக்கு சாதகமாக இருந்தது. இரு அணிகளிலும் உள்ள அனைத்து சிறந்த பேட்ஸ்மேன்களும் இம்மைதானத்தில் கடுமையாக தடுமாறினர். இதனை வைத்து பார்க்கும் போது இம்மைதானத்தில் 150 முதல் 160 ரன்கள் விளாசினாலே வெற்றி பெற்று விடலாம்.
இரு அணிகளின் நேருக்கு நேர்
விளையாடிய மொத்த போட்டிகள் - 12
மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி - 6
இந்தியாவின் வெற்றி - 5
முடிவில்லை - 1
உத்தேச XI
இந்திய அணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. மேற்கிந்திய தீவுகளில் ஒஸானே தாமஸிற்கு பதிலாக காரே பியேர் களமிறங்க வாய்ப்புண்டு
இந்தியா
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துனைக்கேப்டன்), ஷீகார் தவான், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), க்ருநல் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது.
மேற்கிந்திய தீவுகள்
எவின் லிவிஸ், ஜான் கேம்பேல், ஷீம்ரன் ஹட்மயர், நிக்கோலஸ் பூரான் (விக்கெட் கீப்பர்), கீரன் பொல்லார்ட், ரோவ்மன் பவல், சுனில் நரைன், கர்லஸ் பிராத்வெய்ட் (கேப்டன்), கீமோ பால், செல்டன் காட்ரேல், காரே பியேர்.
நேரலை
இப்போட்டியானது இந்தியாவில் கீழ்க்கண்ட தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன.
சோனி டென் 1 + சோனி டென் 1 HD
சோனி டென் 3 + சோனி டென் 3 HD
கைப்பேசியில் சோனி லிவ் என்ற செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.